மனோ கணேசனுக்கும் தேசிய பட்டியல் வழங்குமாறு செந்தில் தொண்டமான் சிபாரிசு
இலங்கையின் புதிய பாராளுமன்றத்தில் கொழும்பு மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பில் மூன்று தமிழ் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட வாய்ப்பிருந்தும் ஒருவர்கூட தெரிவாகவில்லை.
கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவம் என்பது கட்டாயம் தேவை
அதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனே பொருத்தமானவர்.
இ.தொ.கா மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு இடையில் கொள்கை ரீதியான மாறுபட்ட கருத்துக்கள் உள்ள போதிலும், தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதில் இ.தொ.கா உட்பட ஏனைய தமிழ் கட்சிகளின் ஒருமித்த நிலையிலேயே உள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேலதிகமாக 2 மேற்பட்ட ஆசனங்களை பெறக்கூடிய நிலையில், தேர்தலில் வெற்றிப் பெற போவதில்லை என அறிந்தும் பல்வேறு தமிழ் சுயேட்சை குழுக்கள் தமிழ் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கில் களமிறக்கப்பட்டன.
இதனால் கடந்த காலங்களில் மக்களுக்காக பல்வேறு சேவைவைகளை முன்னெடுத்த மருதப்பாண்டி ராமேஸ்வரன் பாராளுமன்றம் தெரிவு செய்வதற்கு தடையாக அமைந்தது.
அதனை தொடர்ந்து சக்திவேலுக்கும் பாராளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு இழக்கப்பட்டது. இவர்கள் இருவரைவிட குறைந்த வாக்குகளை பெற்ற சிலர் இன்று பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் கொழும்பில் ஏனைய கட்சிகளை விட ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர் மனோ கணேசன் அதிக தமிழ் வாக்குகளை பெற்றுள்ளார்.
அதற்கு காரணம் அவர் கடந்த காலங்களில் கொழும்பு மாவட்டத்தில் முன்னெடுத்த சேவைகள். அதன் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு தமிழர் ஒருவருக்கு தேசிய பட்டியல் வழங்க வேண்டிய தார்மீக பொறுப்பு உள்ளது.
கொழும்பில் தமிழ் வேட்பாளர்களில் அதிகப்படியான வாக்குகளை பெற்று, கடந்த காலங்களில் ஆற்றிய சேவையை கருத்தில் கொண்டு மனோகணேசனுக்கு தேசியப் பட்டியல் வாய்ப்பை வழங்கி கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கான அங்கீகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்க வேண்டும்’ என இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.