நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு !
யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து சுயேட்சையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
சிவில் செயற்பாட்டாளர்கள் சிலர் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் (21) கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவரின் ஆசனத்தில் அமர்த்திருந்தார்.
இதன்போது நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் அவரை வேறு ஆசனமொன்றில் அமருமாறு கோரிய நிலையில் அதற்கு வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மறுப்பு தெரிவித்திருந்ததுடன், அது தொடர்பான காணொளியை தமது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.
அதேநேரம் நாடாளுமன்ற அமர்வு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வெளியிட்டிருந்த மற்றுமொரு காணொளியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை தமது இறைவனாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்து கொண்ட இராமநாதன் அர்ச்சுனா, அரசியலமைப்புக்கு முரணான கருத்துக்களை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, இனவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக சிவில் செயற்பாட்டாளர்களான சட்டத்தரணி யலித் விஜேசுரேந்தர மற்றும் குணரத்ன அதிகாரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.