எதிர்க்கட்சியினர் காலம் கடந்த பல்லவியை மாத்திரம் பாடிக் கொண்டிருக்கிறார்கள்
மலையக பெருந்தோட்ட மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமையைப் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் சபையில் தெரிவித்துள்ளார் .
வடக்கையும், கிழக்கையும் இணைத்து தனி நாட்டு கருத்தியலை முன்வைப்பதை நாம் முழுமையாக நிராகரிப்பதாக, சபையில் சுட்டிக்காட்டிய அவர் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கும், அதனூடாக தமிழ், முஸ்லிம், சிங்களம் என ஒட்டுமொத்த மக்களின் நலனையும், வாழ்வியலையும் மேம்படுத்தவும் தேசிய மக்கள் சக்தி கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (05) நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ”பதுளை தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு அமோக வெற்றியைப் பெற்றுக் கொடுத்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எதிர்க்கட்சியினர் காலம் கடந்த பல்லவியை மாத்திரம் பாடிக் கொண்டு, விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள்.
மலையக சமூகம் 200 ஆண்டுகால பின்னணியை கொண்டுள்ளது. 21 ஆம் நூற்றாண்டிலும் நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளோம்.
உரிமைகள் மறுக்கப்பட்டு வெறும் சலுகை கோட்பாடுகளுக்குள் மாத்திரமே மலையக சமூகம் உள்வாங்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசியல் ரீதியில் எம்மையும் இணைத்துக் கொண்டு அரசியல் உரிமைகளை வழங்கியுள்ளது.
200 வருடகால பின்னணியை கொண்டுள்ள நாம், பல சவால்களை கடந்து வந்துள்ளோம். 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தது. மலையக பெருந்தோட்ட மக்கள் இடதுசாரி கொள்கையுடன், செஞ்சட்டை அமைப்பை ஆதரித்தனர்.
இதனைத் தொடர்ந்து பதுளை மாவட்டத்தில் இருந்து நடராஜா என்பவர் பாராளுமன்றத்துக்கு தெரிவானார். பெருந்தோட்ட மக்கள் இடதுசாரி அமைப்பினை ஆதரிப்பதால், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பெருந்தோட்ட மக்களின் குடியுரிமையை பறித்தது. இதன் பின்னர் மலையக மக்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர்.” என தெரிவித்துள்ளார்.