குளிர் தாங்கிக்கொள்ள முடியலையா ?
குளிர் தாங்கமுடியாமை என்பது உடலிலுள்ள ஏதோ ஒரு நோயின் அறிகுறியாகும். இது உடலிலும் ஏற்படும் வளர்சிதை மாற்றம் சார்ந்த பிரச்சனையே ஆகும்.
உதாரணத்திற்கு வயதான, மிகவும் ஒல்லியான பெண்களால் சாதாரண குளிரைக்கூட தாங்கிக் கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு உடலில் மிகமிகக் குறைவான அளவிலேயே கொழுப்பு இருக்கிறது.
நமது உடலிலுள்ள ரத்தத்தில் கலந்திருக்கும் கொழுப்பு வேறு. நமது உடலில் பரவி இருக்கும் கொழுப்பு வேறு. குளிர் தாங்க முடியாமைக்கு மேலும் சில காரணங்கள் உள்ளன. அவை:
ரத்த சோகை, பசியின்மை, அதிக குளிரினால் ரத்தக்குழாய்கள் இறுகிப்போதல், ஹைப்போதலாமஸ் சுரப்பியில் பிரச்சனை, தசை நார் வலி, ஹைப்போதைராய்டு குறைபாடு, நாள்பட்ட நோய், உடலில் கொழுப்பு குறைவாக இருப்பது.
பொதுவாக மனித உடலின் வெப்பநிலை பல அமைப்பு முறைகளினால் கட்டுப்படுத்தப்படுகிறது. மூளைக்கு அடிப்பகுதியிலுள்ள ஹைப்போதலாமஸ் உறுப்பு முன் கழுத்துப் பகுதியிலுள்ள தைராய்டு சுரப்பிக்கு செய்தியை அனுப்புகிறது.
உடனே தைராய்டு சுரப்பி உடலில் நடக்கும் வளர்சிதை மாற்றத்தை கண்காணித்து அதிக கலோரி சக்தியை சேமித்து வைக்குமாறு உடலுக்கு உத்தரவிடுகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் கலோரி உடலுக்கு சக்தி தருவதால் உடல் சூடாகிறது.
உடலில் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தம் இந்த உடல் சூட்டை உடல் முழுக்க எடுத்துக்கொண்டு போகிறது. இதுபோக உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு உடல் சூட்டை அப்படியே பாதுகாத்து வைத்துக் கொள்கிறது.
இதில் எந்த அமைப்பு சரியாக வேலை செய்யாவிட்டாலும் உடல் சூடு ஒரே நிலையில் இருக்காது. உடல் வெப்பநிலையில், சுற்றுப்புற வெப்பநிலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் உடலில் பாதிப்பு ஏற்படும்.
அதிக குளிரில் விரைத்துப்போய் உடல் நடுக்கம் வந்தால், உங்கள் உடல் வெப்பத்தை இழந்து கொண்டிருக்கிறது என்பதற்கு அறிகுறியாகும். உடனே, பல அடுக்கு வெப்ப உடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
உள்ளங்கை பாதம் இரண்டையும் சூடேற்றுமாறு தொடர்ந்து நன்றாகத் தேய்க்க வேண்டும். குழந்தைகளாகவோ வயதானவர்களாகவோ இருந்தால் உடலோடு உடல் உரசிக் கொண்டு இருக்கிறமாதிரி அரவணைத்துக் கொண்டு சில நிமிடங்கள் இருந்தால் குளிர் குறைந்து உடல் சூடாகும்.
எல்லாம் சரியாக இருந்தும் மற்றவர்களால் தாங்கிக் கொள்ளக்கூடிய குளிரை உங்களால் தாங்க முடியவில்லை என்றால் உங்கள் குடும்ப டாக்டரின் ஆலோசனைப்படி சில ரத்த பரிசோதனைகளைச் செய்து என்ன காரணத்தினால் குளிரைத் தாங்க முடியவில்லை என்பதைக் கண்டுபிடித்து அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
குளிரை எல்லோராலும் தாங்கிக் கொள்ள முடிந்தால் மழைக் காலமும் பனிக்காலமும் சுகமானவை தான்.