பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு பிணை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு பிணை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

தன்னுடைய பிரதமர் பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022ம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது.

பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அதே வேளையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்று சொத்து சேர்த்த வழக்கில் இம்ரான்கானுக்கு, அவரது மனைவிக்கும் வழங்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனையை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், அரசு பரிசுப் பொருட்களை விற்று சொத்து சேர்த்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கான் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனுவை மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தற்போது ஜாமீன் வழங்கப்பட்டாலும் இம்ரான் கான் மீது பிற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவாரா என்பதற்கான விடை கேள்விக்குறியாகவே உள்ளது.

முன்னதாக, இதே வழக்கில் கைது செய்யப்பட்ட இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபிக்கும், கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி இதே நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அவர் சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )