
பிறந்து மூன்று நாளே ஆன குழந்தையின் வயிற்றில் இருந்த இரட்டை கருக்கள்
சமீபத்தில் மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு ‘கருவில் கரு’ இருப்பது கண்டறியப்பட்டது.
புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது பெண், கடந்த மாதம் வழக்கமான பரிசோதனையின் ஒரு பகுதியாக சோனோகிராபிக்கு உட்படுத்தப்பட்டபோது, அவரது வயிற்றில் இருந்த குழந்தைக்குள் மற்றொரு குறைபட்ட கரு வளரும் அரிய பிறவி கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.
அந்தப் பெண்ணுக்கு பிப்ரவரி 1 ஆம் திகதி புல்தானா மகளிர் மருத்துவமனையில் நடந்த பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதைத் தொடர்ந்து, அவரும் குழந்தையும் அமராவதி மாவட்டத்தில் உள்ள ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
அங்கு மருத்துவர்கள் குழு புதிதாகப் பிறந்த குழந்தையின் வயிற்றில் இருந்து இரண்டு கருக்களை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றியது அமராவதி பிரதேச மருத்துவமனையில் மருத்துவர் உஷா கஜ்பியேவின் மேற்பார்வையில் பிறந்த 3 நாட்கள் ஆன அந்த ஆண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய மருத்துர் கஜ்பியே, மூன்று நாள் குழந்தையின் வயிற்றில் கைகள் மற்றும் கால்களுடன் இரண்டு [இரட்டைக்] குழந்தைகள்[கரு] இருந்ததாக கூறினார்.
அறுவை சிகிச்சையின் போது கருக்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன, மேலும் குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர் என்று அவர் கூறினார்.
அந்தப் பெண் 35 வார கர்ப்பமாக இருந்தபோது சோனோகிராபி செய்த புல்தானா மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் மருத்துவர் பிரசாத் அகர்வால் பேசுகையில், ‘கருவில் கரு’ என்பது மிகவும் அரிதான மருத்துவ நிலைகளில் ஒன்றாகும்.
இது ஐந்து லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படுகிறது. இதுவரை உலகம் முழுவதும் இதுபோன்று 200 பேருக்கு மட்டுமே இருந்துள்ளது. இந்தியாவில் 10-15 பேருக்கு மட்டுமே இந்நிலை உருவானது என்று தெரிவித்தார்.
