நிலவில் அணு மின் நிலையம் அமைக்கவுள்ள ரஷ்யா
நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ள தாகவும் இதில் இணைந்து செயல்பட இந்தியாவும் சீனாவும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெற்றது.
இதில் ரஷ்யாவின் அணுசக்தி கழகமான ரோசாடோம் அமைப்பின் தலைவர் அலெக்சி லிகாசெவ் பேசும்போது, “நிலவில் சிறிய அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இது அரை மெகாவாட் மின் உற்பத்தி செய்யும்.
இதில் இணைந்து செயல்பட சீனாவும் இந்தியாவும் விருப்பம் தெரிவித்துள்ளன. பல சர்வதேச விண்வெளி திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்” என்றார்.
இந்த செய்தியை ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸை மேற்கோள் காட்டி யூரேஷியன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
2036-ம் ஆண்டுக்குள்… நிலவில் அணு மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இது 2036-ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்றும் ரஷ்யாவின் விண்வெளி முகமையான ரோஸ்காஸ்மோஸ் கடந்த மே மாதம் அறிவித்தது.