அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் இயற்றினார்.

அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்தச் சட்டத்திற்கு தடை கோரி பைட்டான்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் வாஷிங்டன் நீதிமன்றில் மனுதாக்கல் செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து பைட்டான்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ஜனவரி 19-ம் திகதிக்குள் டிக்டாக் செயலியை விற்க வேண்டும் என்ற சட்டத்தால் அமெரிக்க மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள டிக்டாக் செயலி தடை செய்யப்படுமானால், அந்தச் செயலியை பயன்படுத்தி வரும் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை கடந்த மாதம் 18-ம் திகதி உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்நிலையில், டிக்டாக்கை அதன் சீன தாய் நிறுவனமான பைட் டான்ஸ் லிமிடெட் ஜனவரி 19-ம் திகதிக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும். இல்லையெனில் டிக்டாக்கைத் தடை செய்யப்படும் என அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதிபட தெரிவித்தது.

அதன்படி டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ள நிலையில் இன்று [ஜனவரி 19] முதல் தடை அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை தாற்காலிகமாக நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனிடையே ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நாளை (20) அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப் டிக் டாக் தடையை விரும்பவில்லை என்று தெரிகிறது.

ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்றவுடன் டிக் டாக்கை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை செய்வோம். டிரம்ப் எங்களுடன் இணைந்து பணியாற்றுவார் என்று நம்பிக்கை உள்ளது என்று டிக் டாக் உரிமையாளரான பைட்டான்ஸ் நிறுவனமும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பதவியேற்றதும் டிரம்ப், பைட்டான்ஸ் நிறுவனம் டிக் டாக்கை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க மேலும் 90 நாட்கள் அவகாசம் வழங்குவார் என்று கூறப்படுகிறது. அல்லது வேறு வழிகளில் டிக் டாக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர ஆவண செய்வார் என்று டிரம்ப் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )