இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைகிறது – இலங்கை மத்திய வங்கி
சுதந்திரத்திற்குப் பின்னர் வரலாற்றில் மோசமான பொருளாதார மந்த நிலை எதிர்நோக்கப்பட்ட 2023 ஆண்டைத் தொடர்ந்து, இலங்கையின் பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தனது வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய வங்கியின் ‘2023 வருடாந்த பொருளாதார விளக்கவுரை ‘ மற்றும் ‘ 2023 நிதி அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் ‘முதலான தலைப்புக்களிலான தனது அறிக்கையிலேயே சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று முன்தினம் (25) கையளிக்கப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியின் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கும் பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் பொறுப்புக் கூறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிக்கான புதிய சட்டத்துக்கு அமைவாக சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கை இதுவாகும்.
இந்த அறிக்கைக்கு அமைவாக ஆண்டுக்கான பொருளாதார விளக்கவுரை மூன்று அத்தியாயங்களிலும் மத்திய வங்கியின் நிதி அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் அறிக்கை ஐந்து பகுதிகளையும் கொண்டதாக அமைந்துள்ளன.
2023 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரத்தின் செயற்பாடுகள் படிப்படியாக மீண்டு வருவதை வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.