பியூமாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவன் சலிது மல்ஷிகா அல்லது குடு சலிந்துவின் பிரதான சீடனாக அறியப்படும் ஹபுந்திரியின் டொன் பியும் ஹஸ்திகா அல்லது “பியூமா” தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டு வரும் நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் இன்று (21) உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், சந்தேகநபரின் வங்கி கணக்குகள் ஊடாக பெருமளவிலான பணம் புழக்கத்தில் உள்ளதால் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்ததுடன், ஐந்து வங்கிக் கணக்குகளை பரிசோதிக்கும் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரினால் விடுக்கப்பட்ட சிவப்பு அறிவித்தலின் பிரகாரம், சந்தேகநபரை பெப்ரவரி 15ஆம் திகதி டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்துவருமாறு அறிவிக்கப்பட்டதையடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று டுபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டு சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டது.
கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
அவர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி இவோன் நிராஷா, தமது கட்சிக்காரர் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படவில்லை எனவும் அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், சந்தேகநபருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் பிணையில் விடுவிக்கப்பட வேண்டுமென சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
அங்கு சாட்சியமளித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சந்தேகநபருக்கு எதிராக திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருப்பதாகத் தெரிவித்தனர்.
குடு சலிது, சலிது மல்ஷிகா உள்ளிட்ட பாதாள உலக உறுப்பினர்களுடன் இணைந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவது விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரு தரப்பினரும் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த நீதவான், சந்தேகநபர் தொடர்பான ஆதாரங்களின் சுருக்க அறிக்கையை நாளை மறுதினம் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டதுடன், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.