2048ஆம் ஆண்டுக்குள் வறுமையற்ற நாடாக இலங்கை கட்டியெழுப்பப்படும் !

2048ஆம் ஆண்டுக்குள் வறுமையற்ற நாடாக இலங்கை கட்டியெழுப்பப்படும் !

2048ஆம் ஆண்டுக்குள் வறுமையற்ற நாடாக இலங்கையை கட்டியெழுப்பவும் தனிநபர் வருமானத்தை 20,000டொலராக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அபிவிருத்தி வேலைத்திட்டத்தை தேசிய நிகழ்ச்சி நிரலாக பாராளுமன்றத்தில் சட்டமாக்கி ஜனாதிபதி தேர்தலில் அதனை முன் வைக்கும் ஒரே ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

நாட்டின் வரலாற்றில் இதுவரை காலமும் இல்லாத வகையில் அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்யும் யோசனைகளை அரசாங்கம் முன்வைத்துள்ள நிலையில் அதற்கு எதிராக செயற்பட்டு நிரந்தரமாக நாட்டை அழிவுக்குள் உட்படுத்த வேண்டாம் என்றும் அவர் சபையில் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கலால் வரி சட்டம் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

“2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் சர்வ
தேச நாணய நிதியத்துடன் மேற்கொண்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைய மேற்படி வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்படுகிறது.

சம்பள முரண்பாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு அனைத்து அரசாங்க சேவைக்கும்
நன்மை கிட்டும் வகையில் தீர்மானங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் என்ற வகையில் டாக்டர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆகியோருக்கு இடைக்கால கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

அரசாங்க சேவையில் நிலவும் இந்த சம்பள முரண்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக குழு ஒன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

அதற்கிணங்க உதய ஆர்.செனவிரத்ன தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது. அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் திருத்தம் கொண்டுவரப்பட்டு மூன்று வருடங்களில் அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் போது அரசாங்க சேவையில் கீழ் மட்டத்தில் உள்ளவர்களின் சம்பளமும் 55 ஆயிரம் ரூபாவாக அமையும்.

அந்த வகையில் வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு இவ்வாறு சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பணத்தை அச்சிட முடியாது என்ற அடிப்படையில் சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்துடன் அரச நிதி முகமைத்துவ சட்டத்தை நாம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளோம்.

பொருளாதார மாற்றம் சட்டம் சட்டத்தையும் நாம் கொண்டு வந்தோம். அதனை ஊழல் மோசடிகளை நிறுத்தும் சட்டமாக நாம் இனங்காட்ட முடியும்.

அந்த வகையில் 2048ஆம் ஆண்டுக்குள் வறுமையற்ற நாடாக இலங்கையை கட்டியெழுப்பவும் தனிநபர் வருமானத்தை 20,000 டொலராக அதிகரிக்கவும் நாம் நடவடிக்கை எடுப்போம்”என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )