மக்கள் பிரதிநிதிகளை பாடசாலைகளுக்கு அழைப்பதை உடன் நிறுத்த வேண்டும் – பிரதமர்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் கல்வித்துறை முன்னேற்றத்திற்காக
அதிகளவு நிதியை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வியமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும் அவநம்பிக்கையை இல்லாதொழிப்பதற்கு, மேற்படி நிறுவனங்கள் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
அதேவேளை, பரீட்சை வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு உடனடியாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அவர்,அவ்வாறு கசிந்துள்ள வினாத்தாள் தொடர்பில் முழுமையான விசாரணை அறிக்கையொன்றை தமக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
பிரதமருக்கும் கல்வியமைச்சின் அனைத்து பிரிவு அதிகாரிகளுக்குமிடையில் நேற்று
முக்கிய பேச்சு வார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. அதன் போதே
பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள பிரதமர்,
கல்வித்துறையை அபிவிருத்தி செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
அதற்காக அதிகளவு நிதியை ஒதுக்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.
கல்வியமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் மீதும் மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
குறிப்பாக பரீட்சைகளை நடத்துவது மற்றும் பெறுபேறுகள் வெளியிடுவதை விரைவுபடுத்த வேண்டும்.
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும்போது முறையான முறைமையொன்று பின்பற்றப்பட வேண்டியது அவசியம்.
மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும் வகையில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அத்துடன் மக்கள் பிரதிநிதிகளை பாடசாலைகளுக்கு அழைப்பது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்