இஸ்ரேலின் மொசாட் தலைமையகம், விமான தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
காசா போரில் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக லெபனானில் இருந்தபடி இஸ்ரேலை இலக்காக கொண்டு ஹிஸ்புல்லா அமைப்பு தாக்கி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இதில் அந்த அமைப்பின் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சூழலில், அந்த அமைப்புக்கு ஆதரவாக ஈரானும் இணைந்து கொண்டது. இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை நேற்று (01) வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
எனினும், அவற்றில் பல ஏவுகணைகளை வழியிலேயே தடுத்து, அழித்து விட்டோம் என இஸ்ரேல் கூறியது. இந்நிலையில், இஸ்ரேலின் 2 இராணுவ தளங்களை இலக்காக கொண்டும் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
இதுபற்றி ஈரானின் இராணுவ உயரதிகாரியான, ஈரான் ஆயுத படைகளின் தலைவர் முகமது பாகேரி, அந்நாட்டு அரசு தொலைக்காட்சியிடம் பேசும்போது, நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு ஆகியவற்றின் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆபரேசன் ட்ரூ பிராமிஸ் 2 என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இஸ்ரேல் நாட்டின் எப்-35 போர் விமானங்களை உள்ளடக்கிய விமான தளமும் அடங்கும் என தெஹ்ரான் டைம்ஸ் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.
இந்த ராணுவ விமான தளத்தில் இருந்தே கடந்த 27-ந்தேதி பெய்ரூட் நகரை நோக்கி போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன என்றும் தெரிவித்து உள்ளது.
இந்த 3 தளங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஹைப்பர்சோனிக் பதா ரக ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தி உள்ளது. ஆனால், பொதுமக்களின் குடியிருப்புகள் மற்றும் உட்கட்டமைப்புகளை உள்நோக்கத்துடன் தாக்கவில்லை என்றும் பாகேரி கூறியுள்ளார்.