லெபனான், காசாவில் இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களினால் மேலும் பலர் உயிரிழப்பு !

லெபனான், காசாவில் இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களினால் மேலும் பலர் உயிரிழப்பு !

லெபனானில் தாக்குதல்களை விரிவுபடுத்தி இருக்கும் இஸ்ரேல் வடக்கு காசாவில் முற்றுகையைத் தொடர்வதோடு ஏனைய பகுதிகளிலும் குண்டு மழை பொழிவதால்
பலரும் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு காசாவுக்கு தனது படை நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேலிய இராணுவம் காசா நகரின் வடக்கு முனைவரை தனது டாங்கிகளை நகர்த்தியுள்ளது.

ஷெய்க் ரத்வான் பகுதியில் உக்கிர தாக்குதல்களை நடத்திவரும் சூழலில் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.

இஸ்ரேலியப் படை காசா நகரில் இருந்து வடக்காக பெயித் ஹனூன்,ஜபலியா மற்றும் பெயித் லஹியா பகுதிகளை தனிமைப்படுத்தி இருப்பதாகவும் இரு பகுதிகளுக்கு
இடையே தடுப்புகளை ஏற்படுத்தி மக்கள் வெளியேறுவதற்கு அனுமதி பெற வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தி இருப்பதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு காசாவில் இஸ்ரேலிய படை நடவடிக்கை நேற்றுடன் ஒன்பது நாட்களை தொட்டதோடு இங்கு இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 300 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா அரச ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலியப் படை வேண்டுமென்றே பொதுமக்களின் வீடுகள் மற்றும் இடம்பெயர்தவர்களின் தற்காலிக முகம்கள் மீது தாக்குதல் நடத்தி
மக்களை முழுமையாக வெளியேற்ற முயற்சிப்பதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவில் வீதிகளில் மற்றும் இடிபாடுகளில் மருத்துவக் குழுவினரால் அணுக முடியாத வகையில் கொல்லப்பட்ட உடல்கள் அங்காங்கே இருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

‘நாம் வெளியேறப்போவதில்லை,நாம் இறப்போம் வெளியேற மாட்டோம்’ என்று ஜபலியா அகதி முகாமில் இருக்கும் குடியிருப்பாளர்கள் சமூகதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

காசாவின் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அதன் வடக்கு பகுதியில் வசித்ததோடு போரின் முதல் கட்டத்தில் அங்கே இஸ்ரேல் உக்கிர தாக்குதல்களை நடத்தியது.

இதனால் அங்கிருந்து பெரும்பாலான மக்கள் தெற்கை நோக்கி வெளியேறிச்
சென்றமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் வடக்கிலும் இஸ்ரேலின் வான்மற்றும் தரைவழி தாக்குதல்கள்
நீடித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் 52 பேர் கொல்லப்பட்டு மேலும் 128 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக நீடிக்கு இஸ்ரேலின் இடைவிடாத
தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 42,227 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 98,464 பேர் காயமடைந்துள்ளனர்.

மறுபுறம் லெபனானில் வான் தாக்குதல்களை விரிவுபடுத்தி இருக்கும் இஸ்ரேல் அங்கு சம்பிரதாயமான ஹிஸ்புல்லா கோட்டைகளாக கருதப்படும் பகுதிகளுக்கு வெளியிலும்
தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளுடன் நேருக்கு நேர் மோதல் வெடித்துள்ளது.

ஹிஸ்புல்லா பலம் கொண்ட எல்லைப் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் 100 ஆண்டு பழமையான பள்ளிவாசலை இஸ்ரேலிய போர் விமானம் தாக்கியதாக லெபனானின்
உத்தியோகபூர்வ தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

தெற்கு நகரான நபட்டியாவின் சந்தைப் பகுதி ஒன்றும் நேற்று இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்கள் அதிகம் இருக்கும் மலைப் பிரதேசத்தில் ஷியா முஸ்லிம் கிராமம் ஒன்றும் வடக்கு லெபனானிலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உயிரிழப்புகள்
இடம்பெற்றிருப்பதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எல்லைப் பகுதியில் இரு முறை இஸ்ரேலியத் துருப்புகள் ஊடுருவ முயன்ற நிலையில் அங்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் மோதல் நீடித்ததாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
மரூன் அல் ராஜ் கிராமத்தில் நிலை கொண்ட இஸ்ரேலிய படையினர்
மீது ஷெல் குண்டுகளை வீசியதாகவும் அது குறிப்பிட்டது.

தெற்கு ஹைபாவில் உள்ள இஸ்ரேல் முகாம் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா கூறிய நிலையில் ஹிஸ்புல்லா வீசிய ரொக்கெட்டுகளை இடைமறித்ததாக இஸ்ரேல் கூறியது.

இதேவேளை தெற்கு லெபனானில் இருந்து அமைதிகாக்கும் படையினரை உடன் வெளியேறும்படி ஐக்கிய நாடுகள் சபை தலைவர் அன்டோனியோ குட்ட
ரசை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

‘பாதிப்புகளை தவிர்ப்பதற்கு அங்கிருந்து வெளியேற்றுங்கள். அதனை இப்போது உடன் செய்ய வேண்டும்’ என்று வீடியோ அறிவிப்பு ஒன்றின் மூலம் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

அமைதிகாக்கும் படையினர் மீது கடந்த சில நாட்களாக இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் அந்த வீரர்கள் பலர் காயமடைந்திருப்பதோடு அது சர்வதேச கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )