இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக பிடியாணை
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.
இதற்கு பதிலடியாக காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் அரசு போர் தொடுத்தது.
ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் காசா பகுதியில் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இந்த போரால் காசாவில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.
இதற்கிடையில், காசாவில் போர்நிறுத்தம் கொண்டு வந்து அங்குள்ள மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என இஸ்ரேல் அரசிடம் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை வழக்கறிஞரான கரிம் கான், இஸ்ரேல் மற்றும் காசா முனையில் மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாகவும், அதற்கு காரணமான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரி யோவ் காலண்ட், ஹமாஸ் தலைவர்கள் யெஹ்யா சின்வார், முகமது தயிப் மற்றும் இஸ்மாயில் ஹானியே ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கு பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட பல்வேறு இஸ்ரேலிய தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இந்த நடவடிக்கையை யூத விரோதம் என்று விமர்சித்தனர். அதே போல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இஸ்ரேலுக்கு தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை உள்ளது என்று அவர் கூறினார்.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரி யோவ் காலண்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில், நெதன்யாகு மற்றும் காலண்ட் ஆகியோர், காசா மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்துகள் ஆகியவற்றின் விநியோகத்தை உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே தடை செய்து, போர் குற்றம் இழைத்ததற்கான சான்றுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கைது வாரண்ட் உத்தரவு ரகசியமாக வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால் தற்போது வரை இந்த கைது வாரண்ட்டில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் இதனை பொதுவெளியில் வெளியிட முடிவு செய்ததாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக இஸ்ரேல் தரப்பில் முன்வைக்கப்பட்ட மேல்முறையிட்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நிராகரித்துள்ளது.
இந்த உத்தரவின் மூலம் நெதன்யாகு மற்றும் யோவ் காலண்ட் ஆகியோர் சர்வதேச அளவில் தேடப்படும் நபர்களாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் 13 மாத மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் இஸ்ரேலும், அதன் முக்கிய கூட்டாளியான அமெரிக்காவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினர்களாக இல்லாததால், இந்த உத்தரவின் நடைமுறை தாக்கம் குறையலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் ஹமாஸ் தலைவர் முகமது தயிப் இப்ராகிம் அல்-மஸ்ரி உள்ளிட்டோருக்கு எதிராகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் காசாவில் நடந்த வான்வழி தாக்குதலில் முகமது தயிப் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.