புதிய சாதனை படைத்த ஜஸ்பிரித் பும்ரா
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், அவுஸ்திரேலியா – இந்தியா அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் எனும் புதிய மைல்கல்லை கடந்து அசத்தியுள்ளார். மெல்போர்னில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் பும்ரா இந்த சாதனையை படைத்துள்ளார்.
ஏற்கனவே இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள பும்ரா 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாதனையோடு, சர்வதேச கிரிக்கெட்டில் புகழ்பெற்ற மால்கோம் மார்ஷல், ஜோயல் கார்னர் மற்றும் கர்ட்லி ஆம்ப்ரோஸ் ஆகியோரை முந்தியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் யாரும் பும்ரா அளவுக்கு சிறப்பான சராசரியை வைத்திருந்ததில்லை.
200 விக்கெட்டுகளை கடந்தும், 201 மற்றும் 202வது விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ராவின் சராசரி 19.5 மட்டும் தான். இதன் மூலம் அவர் மால்கோம் மார்ஷல் (20.9), கோயல் கார்னர் (21.0) மற்றும் கர்ட்லி ஆம்ப்ரோஸ் (21.0) ஆகியோரை விட சிறப்பான சராசரியை வைத்துக் கொண்டு 200 விக்கெட்டுகளை கைப்பற்றி பும்ரா சாதனை படைத்துள்ளார்.
இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த பந்துவீச்சாளரும் பும்ரா அளவுக்கு 19.56 எனும் சராசரியுடன் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியது இல்லை. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெடெ்டில் பும்ராவின் 200வது விக்கெட் டிராவிஸ் ஹெட் ஆக அமைந்தது.