காதலியை தேடி 200 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த புலி
காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களிடமும் இருக்கிறது என்பது பல சம்பவங்களில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரஷியாவை சேர்ந்த ஒரு புலி தனது துணையை தேடி 200 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.
ரஷியாவில் சிஹோடா மலைப்பகுதியில் 2 புலிக்குட்டிகள் கடந்த 2012-ம் ஆண்டு வனத்துறையால் மீட்கப்பட்டது. அதில் ஆண் புலிக்கு போரீஸ் என்றும், பெண் புலிக்கு ஸ்வேத்லயா என்றும் பெயரிட்டு வளர்த்தனர். இந்த 2 புலிகளும் தனித்தனியாக தங்களது எல்லைகளை பகிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக அவற்றை பிரித்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் சைதிரியா வனப்பகுதியில் போரீஸ் புலியை விட்டனர்.
ஆனால் அந்த புலி தனது இருப்பிடத்தை நோக்கி தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்தது. அதே நேரம் துணையை பிரிந்த ஸ்வேத்லயா வேறு எங்கும் பயணம் செய்யாமல் விட்ட இடத்திலேயே தொடர்ந்து சுற்றியது. இந்த புலிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் போரீஸ் புலி 3 ஆண்டுகள் பயணம் செய்து ஸ்வேத்லயா இருக்கும் வனப்பகுதிக்கு வந்து சேர்ந்தது. கடந்த 6 மாதங்களாக 2 புலிகளும் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்கின்றன. இவற்றின் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.