போக்குவரத்து சிக்கல்களை தீர்க்க 3 உப குழுக்கள் நியமனம்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் துறையில் காணப்படும் சிக்கல்களுக்கு சட்டரீதியான மற்றும் நிர்வாக தீர்வுகளைக் கண்டறிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுடன் இணைந்த 3 உப குழுக்கள் நியமிக்கப்பட்டன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் கடந்த 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த உப குழுக்கள் நியமிக்கப்பட்டன. பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் 1ஆவது அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் (வைத்தியர்) பிரசன்ன குணசேன உள்ளிட்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 60 பாராளுமன்ற உறுப்பினர்களும், சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்களின் சுமார் 40 அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.
அதற்கமைய, தொழிற்துறையிலுள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் விதான, திணிந்து சமன், தேவானந்த சுரவீர ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறை சம்பந்தமான சட்டரீதியான கட்டமைப்பை வலுப்படுத்தி நேர்மறையான திசையில் வழிநடத்துதல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில், சுகத் வசந்த த சில்வா, தனுர திஸாநாயக்க மற்றும் சுஜீவ திசாநாயக்க ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய மேலதிக சேவைகளை உருவாக்குவதன் மூலம் வருமானம் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவீந்திர பண்டார மற்றும் தனுஷ்க ரங்கநாத் அகியோருரை உறுப்பினர்களாகக் கொண்ட உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற சபா மண்டபத்தில் எவ்வாறாயினும், பாராளுமன்றக் குழுக்களில் கட்சி பேதம் இல்லை என்றும், அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்புடன் சிக்கல்களைக் கண்டறிந்து ஒன்றாக சேர்ந்து அவற்றுக்கான தீர்வுகளைத் தேட வேண்டும் என இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார். அதற்கமைய, அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்குப் பொறுப்புக் கூறக் கூடிய மூன்று உப குழுக்களை நியமிப்பதற்கு அவர் முன்மொழிந்ததுடன், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் துறைப் பணியாளர்களின் உரிமைகள், பிரச்சினைகள் மற்றும் அவர்களின் நலன்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதன்போது, இலங்கை போக்குவரத்து சபையில் காணப்படும் வெற்றிடங்கள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதுடன், அது தொடர்பில் எடுக்கக்கூடிய பிரயோகரீதியான நடவடிக்கைகள் தொடர்பிலும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்குக் காணப்படும் வசதிகளுக்கு மேலதிகமாமான வசதிகளை வழங்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக புகையிரதத் திணைக்கள அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா கலந்துகொண்டதுடன், அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் மற்றும் அவற்றின் பணிகள் தொடர்பில் கலந்துகொண்டவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.