
விஷ்ணு விஷால் நடிக்கும் ‘ஆர்யன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு
தமிழ் திரையுலகில் சந்தை மதிப்புள்ள நட்சத்திர நடிகரான விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஆர்யன் ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்துள்ளனர்.
இயக்குநர் கே. பிரவீன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆர்யன்’ எனும் திரைப்படத்தில் விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீ நாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் டி கம்பனி புரொடக்சன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.
பல கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து இருக்கிறது என படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு தெரிவித்துள்ளனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும், விரைவில் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த ஆண்டில் ‘லால் சலாம்’ என ஒரே ஒரு திரைப்படம் மட்டும்தான் வெளியானது என்றும், அந்தத் திரைப்படமும் எதிர்பார்த்த அளவிற்கு வணிகரீதியான வெற்றியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.