மலையக மக்களை ‘மலையகத் தமிழர்கள்” என அடையாளப்படுத்துமாறு உத்தியோகபூர்வ சுற்று நிரூபத்தை வெளியிடுங்கள்

மலையக மக்களை ‘மலையகத் தமிழர்கள்” என அடையாளப்படுத்துமாறு உத்தியோகபூர்வ சுற்று நிரூபத்தை வெளியிடுங்கள்

மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் கடந்துள்ளன. சனத்தொகை மதிப்பீட்டு ஆவணத்தில் அவர்கள் ‘மலையகத் தமிழர்கள்” என அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும், பிறப்புசான்றிதழ் உள்ளிட்டவற்றில் அவ்வாறு அடையாளப்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகிறது. எனவே அந்த மக்களை சகல ஆவணங்களிலும் ‘மலையகத் தமிழர்கள்” என அடையாளப்படுத்துமாறு அரசாங்கம் சுற்று நிரூபத்தின் ஊடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரி பி.முத்துலிங்கம் வலியுறுத்தினார்.

கண்டி – சமூக அபிவிருத்தி நிறுவனம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து மலையக தமிழ் சமூகம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்துறை என்பவற்றின் சமூக, பொருளாதார அந்தஸ்தை விருத்தி செய்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய, பெருந்தோட்ட அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் உள்ளிட்டோரு முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளன.

அவை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக  வெள்ளிக்கிழமை (07) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 வருடங்கள் கடந்துள்ளன. அதற்காக பல்வேறு நிகழ்வுகள் கூட ஏற்பாடு செய்யப்பட்டன. அதற்கமைய கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனம் மலையக மக்களின் 200 வருட வரலாற்றை நினைவு கூறும் வகையில் நுவரெலியாவில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்ததோடு, அந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த ஏற்புரைகளையும் அரசாங்கத்திடம் கையளித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்த முன்மொழிவுகளை தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களிடமும் கட்சிகளிடமும் கையளித்திருந்தோம். இந்நிலையிலேயே கடந்த ஜனவரி 30ஆம் திகதி பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து அந்த முன்மொழிவுகளில் நிறைவேற்றக் கூடிய சில பரிந்துரைகள் தொடர்பில் எடுத்துரைத்திருந்தோம்.

இந்த பரிந்துரைகள் பெருந்தோட்ட அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் கடற்றொழில் அமைச்சர்ஆகியோருக்கும் கையளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அந்த மக்களுக்காக சட்ட ரீதியில் இலகுவாக நிறைவேற்றக் கூடிய யோசனைகளையே பரிந்துரைத்துள்ளோம். அந்த வகையில் 200 ஆண்டுகள் இலங்கையில் வாழும் பிரஜைகள் என்ற அடிப்படையில் அந்த மக்கள் தம்மை ‘மலையகத் தமிழர்கள்” என அடையாளப்படுத்திக் கொள்ளவே விரும்புகின்றனர்.

கடந்த காலங்களில் பல தரப்பினரால் வலியுறுத்தப்பட்டதற்கமைய தற்போதைய சனத்தொகை மதிப்பீட்டு ஆவணத்தில் ‘இந்திய வம்சாவளி தமிழர்” என்ற சொற் பதத்துக்கு அருகில் ‘மலையகத் தமிழர்” என்ற சொற்பதமும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதும் மலையகப் பகுதிகளில் குழந்தைகள் பிறந்த பின்னர் பிறப்புச்சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும் போது ‘மலையகத் தமிழர்” என்று அடையாளப்படுத்திக் கொள்ள முடியாத நிலைமையே காணப்படுகிறது.

எனவே சனத்தொகை மதிப்பீட்டு ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டதைப் போன்று ஏனைய சகல அரச ஆவணங்களிலும் ‘மலையகத் தமிழர்” என அடையாளப்படுத்துமாறு  அரசாங்கம் சகல அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கும் சுற்றுநிரூபத்தின் ஊடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும். அதற்கமைய பிறப்பு பதிவு மற்றும் திருமணப் பதிவு உள்ளிட்ட முக்கிய சந்தர்ப்பங்களில் அவர்களை ‘மலையகத் தமிழர்” என அடையாளப்படுத்த வாய்ப்பளிக்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம்.

மேலும் தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுமார் 74 000 வீடுகளுக்கு இன்னும் உரித்து வழங்கப்படவில்லை. அவற்றை வழங்குவதற்கான சுற்று நிரூபத்தையும் வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதேசசபையின் நிர்வாகம் தோட்டத் துறைக்கு செல்ல வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டதன் விளைவாக 2018ஆம் ஆண்டு பிரதேசசபை திருத்தச்சட்டத்தின் ஊடாக அவற்றின் செயற்பாடுகளை தோட்டங்களில் முன்னெடுப்பதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அதனையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருக்கின்றோம். இவை தவிர மலையக மக்களின் சுகாதார பிரச்சினைகள், தோட்ட வைத்தியசாலைகளை கிராம வைத்தியசாலைகளாக்குதல், கல்வித்துறை மேம்பாடு, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள லயன் அறைகளுக்கான மாற்று குடியிருப்புக்கள் என்பவை தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திடம் முன்மொழிவுகளைக் கையளித்திருக்கின்றோம். பிரதமர் மற்றும் அமைச்சர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதால் அவர்கள் இதனை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கின்றோம் என்றார். 

    CATEGORIES
    TAGS
    Share This

    COMMENTS

    Wordpress (0)
    Disqus ( )