
முகாமைத்துவ கட்டமைப்பை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானம்
புதிய ஊழியர் சேமலாபநிதி முகாமைத்துவ கட்டமைப்பை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ள இது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டின் பாரிய நிதியமான ஊழியர் சேமலாப நிதியத்தின் முழுமையான அங்கத்துவ கணக்குகள், இதுவரை 21.5 மில்லியனாக காணப்படும் நிலையில், பங்களிப்பு நிதி வழங்கும் தொழில் தருநர்களின் எண்ணிக்கை 77,000 ஆகவுமுள்ளது.
அந்த வகையில் 2024 அக்டோபர் மாத இறுதியில் மேற்படி நிதியத்தின் கையிருப்பு 4.2 ட்ரில்லியன் ரூபாவாக காணப்பட்டதுடன் கடந்த வருடத்தின் சில வருடங்களில் இந்த கையிருப்பின் வருடாந்த அதிகரிப்பு 9 வீதத்தை விட அதிக அதிகரிப்பை காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நடவடிக்கைகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்கான தொழில் நுட்ப கட்டமைப்பின் தேவை, தற்போது இனங்காணப்பட்டுள்ளது. புதிய ஊழியர் சேமலாப நிதிய முகாமைத்துவ கட்டமைப்பை நிர்மாணிப்பதற்கு உலக வங்கியின் நிதிப் பிரிவின் நவீனமய திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்திய நிறுவனம் ஒன்றின் ஆலோசகர்கள் இந்த புதிய முகாமைத்துவ கட்டமைப்புக்கான திட்டம் மற்றும் தேவையான செயற்பாடுகளை நிறைவு செய்துள்ளனர்.
இதனை கவனத்திற் கொண்டு உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.