
பல கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது
சுமார் 36 கோடி ரூபாய் பெறுமதியான “ஹஷிஷ்” போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கனடாவின் டொராண்டோவிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரிலிருந்து நேற்று (15) இரவு இலங்கைக்கு வந்தபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த சர்வதேச புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சந்தேகநபர் 36 வயதான கனேடியப் பெண் என்றும், அவர் கடுமையாக போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் கொண்டு வந்த இரண்டு பயணப்பைகளில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 36 கிலோ 500 கிராம் “ஹாஷிஷ்” போதைப்பொருட்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த “ஹஷிஷ்” போதைப்பொருள் கையிருப்பு வேறு நாட்டிற்கு மீண்டும் ஏற்றுமதி செய்வதற்காக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைக்காக, இந்த போதைப்பொருள் தொகையுடன் கனேடிய பெண்ணை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.