
மக்களின் நம்பிக்கையை ஒருபோதும் விலைகொடுத்து வாங்கமுடியாது
” தமிழ் மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெற்றுள்ளது.” என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் , ” எதிர்க்கட்சிகள் பழைய அரசியல் கலாசாரத்திலிருந்து இன்னும் மீண்டுவரவில்லை. அதனால்தான் கூட்டுறவு தேர்தலில் வென்றால்கூட பட்டாசு கொளுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களின் அரசியல் வங்குரோத்து நிலையை அது வெளிப்படுத்துகின்றது. நாம் அவ்வாறு செயற்படப்போவதில்லை. மக்கள் விரும்பும் மாற்றமே எமது நோக்கம்.
தேசிய சமத்துவத்தை ஏற்படுத்தி இலங்கையர்களாக சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் செயல்பட்டுவருகின்றோம். இதனால் எதிரணிகள் கலக்கமடைந்துள்ளன. இனவாதத்தை ஒரு புறம் வைத்துவிட்டு வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மக்கள் ஒரு கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தோழர் அண்மையில் யாழ். சென்றிருந்தபோது அம்மக்களின் அன்பும், நம்பிக்கையும் கிடைக்கப்பெற்றது. எமக்கு தெரிந்த வரலாற்றில் வடக்கு மக்கள் தேசியக் கொடியுடன் இம்முறை சுதந்திரத்;தினத்தைக் கொண்டாடினார்கள். கிழக்கிலும் அவ்வாறு நடந்துள்ளது.
ஒரு நாட்டுக்குள் வாழ்வதற்கு தயார் என அம்மக்கள் செய்தி வழங்கியுள்ளனர். இது பெரும் வெற்றியாகும். மக்களின் நம்பிக்கையை ஒருபோதும் விலைகொடுத்து வாங்கமுடியாது.” என தெரிவித்துள்ளார்.