
அனைத்து மக்களுக்கும் சார்பான வகையில் வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது
பெருந்தோட்ட மக்களின் வாழ்வியல் மற்றும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. யாழ் நூலகத்தை புனரமைப்பதற்கு பாரிய நிதி ஒதுக்கியுள்ளமை ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் சிறந்த அபிமானமாகும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (17) நடைபெற்ற அமர்வில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி முன்வைத்தார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் , ” இலங்கை வாழ் ஒட்டுமொத்த மக்களையும் உள்ளடக்கிய வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த கால வரவு செலவுத் திட்டங்களில் எவ்வாறான முன்மொழிவுகள் காணப்பட்டது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஆனால் இம்முறை உழைக்கும் மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் சார்பான வகையில் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ் நூலகத்தை புனரமைப்பதற்கு பாரிய நிதி ஒதுக்கியுள்ளமை விசேட அம்சமாகும்.இது வடக்கு மக்களுக்கு மாத்திரமல்ல, உலக வாழ் தமிழர்களுக்கும் சிறந்ததொரு அபிமானமாகும்.
பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தோட்ட மக்களின் சம்பள விவகாரம் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.கூட்டு உடன்படிக்கை, நிர்ணய சபை என்று பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் தீர்வு கிடைக்கவில்லை.
இவ்வாறான நிலையில் பெருந்தோட்ட மக்களுக்கு 1700 சம்பளத்தை வழங்குவதற்கான திட்டங்கள் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.பெருந்தோட்ட மக்களின் வாழ்வியலை மேம்படுத்துவதற்கும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்குமான திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வீட்டுத் திட்டங்களை நிறைவு செய்வதற்கும், தோட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கும் விசேட திட்டங்களை முன்வைத்துள்ளோம்.மக்களுக்கான இந்த பாதீட்டை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவோம் என்றார் கிட்ணன் செல்வராஜா.