
செல்வ வளம் பெருக கால பைரவர் வழிபாடு
சிவபெருமனின் மறு அம்சமாக இருக்கும் கால பைரவருக்குரிய திதி என சிறப்பு பெற்றது அஷ்டமி ஆகும். வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி என இரண்டு அஷ்டமி திதிகள் உள்ளன. இரண்டு திதிகளுமே பைரவர் வழிபாட்டிற்கு உரியவை தான்.
எந்த தீய சக்தியும் நம்மை நெருங்கவிடாமல் காப்பவர் ஸ்ரீ கால பைரவர். அப்படி காக்கும் பைரவரை வழிபட சிறந்த தினங்களாக மாதத்தின் அஷ்டமி தினம் கருதப்படுகிறது.
தேய்பிறை அஷ்டமி திதி பைரவர் வழிபாட்டுக்கு மிகவும் விசேஷமானதாகும். அந்த நாட்களில் விரதமிருந்து பைரவரை அர்ச்சித்து வழிபடுவது சிறப்பு.
ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் தேய்பிறை அஷ்டமியன்று ராகு காலத்தில் (மாலை 4.30-6) பைரவரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை, வழக்குகள், கடன் பிரச்சினைகள் தீரும். புதன் கிழமைகளில் வரும் தேய்பிறை அஷ்டமியில் விரதமிருந்து வழிபட, இழந்ததைப் பெறலாம் என்பது நம்பிக்கை.
வளர்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும்போது நாம் பைரவரிடம் நமது வேண்டுதல்களை முன்வைத்து பிரார்த்தனை செய்யவேண்டும். இவ்வாறு வேண்டும் போது நமக்கு தேவையானவை அனைத்தும் மேன்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.
பைரவரை விடாமல் தொடர்ந்து நினைத்து வழிபடுவோருக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் விரைவில் வந்து சேரும். லட்சுமி கடாட்ச யோகம் கிடைக்கும். செல்வ வளம் அதிகரிக்கும், மனதில் புதிய உற்சாகம் பிறக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.