ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக புடின் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியில் கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.
விலடிவோஸ்டாக்கில் உள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் பேசிய புடின்
“அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் தான் எங்களது விருப்பமான வேட்பாளராக இருந்தார். ஆனால் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகி கமலா ஹாரிஸை ஆதரித்தார். ஆகவே நாங்களும் கமலா ஹாரிஸை ஆதரிக்கிறோம்.
கமலா ஹாரிஸின் சிரிப்பு தனித்துவமாக உள்ளது. அந்த சிரிப்பே அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற உணர்வைத் தருகிறது.
முன்பு ஜனாதிபதியாக இருந்த ட்ரம்ப், ரஷ்யாவிற்கு எதிராக பல கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்தார். கமலா ஹாரிஸ் அத்தகைய செயல்களை செய்யமாட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் இறுதியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை அமெரிக்க மக்கள் தான் முடிவு செய்வார்கள்” என தெரிவித்துள்ளார்.