உக்ரேனுக்கு அமெரிக்கா நிதியுதவி
உக்ரேனின் மின்சக்தி பற்றாக்குறைக்கு உதவுவதற்காக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உக்ரேனுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் யுக்ரைன் அமைதி உச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட இந்த நிதி உதவி ரஷ்யாவின் தாக்குதலால் சேதமடைந்த மின்சார உட்கட்டமைப்பை சீர்செய்ய உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ரஷ்யா நடத்திய உக்ரேனின் மின் நிலையங்கள் மீதான தாக்குதலையடுத்து அந்த நாட்டில் பாரிய மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தமது நாட்டின் மின்சார உற்பத்தித் திறனில் பாதியளவு போரில் அழிக்கப்பட்டதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி கடந்த செவ்வாய் கிழமையன்று தெரிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் வலுசக்தி உட்கட்டமைப்பு மையங்கள் மற்றும் நகர்ப்புற மக்களை பாதுகாக்க அதிக வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குமாறு மேற்கத்தேய நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.