
கொழும்பிற்கு 100 சொகுசு பேருந்துகள்
பொதுத்துறை போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஆரம்ப கட்டமாக முன்னோடி அடிப்படையில், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட நவீன மற்றும் வசதியான பேருந்துகளின் தொகுதி அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இன்று (16) காலை பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெளிவுபடுத்தினார்.
பொதுத்துறை போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஆரம்ப கட்டமாக முன்னோடி அடிப்படையில், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட நவீன மற்றும் வசதியான பேருந்துகளின் தொகுதி அறிமுகப்படுத்தப்படும்.
அதன்படி, கொழும்பு பெருநகரப் பகுதிக்குள் மூன்று முக்கிய சாலை வழித்தடங்களில் 100 ஏர்-சஸ்பென்ஷன், தாழ்தள, வசதியான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
100 தாழ்தள பேருந்துகளை கொள்வனவு செய்வதற்காக ரூபா 3,000 மில்லியன் ஒதுக்கீடு செய்ய நாம் முன்மொழிகிறோம். இதற்கு மேலதிகமாக இலங்கை போக்குவரத்து சபையானது தனது சொந்த நிதியில் 200 தாழ்தள பிரயாணிகள் பேருந்துகளை தனது பேருந்து தொகுதிக்குள் சேர்த்துக் கொள்ளும்.
இந்தப் பேருந்துகள் கூட்டாக மெட்ரோ பேருந்துக் கம்பனிகள் (Metro Bus Companies -MBC) எனப்படும் புதிதாக நிறுவப்பட்ட கம்பனிகளின் கீழ் இயக்கப்படும்.