
400 புறாக்களை திருடி சென்ற மர்ம கும்பல்
உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் முகமது கியூம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது முன்னோர்கள் முகலாயர்கள் காலத்திலிருந்து புறாக்களை வைத்து விளையாடும் கபூர்தாசி என்ற விளையாட்டை மிகவும் பிரபலமாக நடத்தி வந்துள்ளனர்.
முன்னோர்கள் வழியில் தற்போதும் அந்த விளையாட்டை மீரட்டில் முகமது கியூம் தொடர்ந்து நடத்தி வருகிறார். இதற்காக அவர் தனது வீட்டு மாடியில் 400 புறாக்களை வளர்த்து வருகிறார்.
அதில் பல அரிய வகை வெளிநாட்டு வகை புறாக்கள் கண்ணைக் கவரும் வகையில் பல வண்ணங்களில் இருந்தன. தினமும் காலையில் புறாக்களுக்கு உணவளிப்பது, அதற்கு பயிற்சி கொடுப்பது என தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த புறாக்களோடு மகிழ்ச்சியாக அவர் நேரத்தை செலவிட்டும் வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று (17) காலை வழக்கம் போல் புறாக்களுக்கு உணவளிக்கு மாடிக்கு முகமது கியூம் சென்றுள்ளார். அப்போது அங்கு புறாக்கள் இல்லாமல் திறந்து கிடக்கும் காலி கூண்டுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மற்ற எல்லா பொருட்களும் அந்தந்த இடத்தில் அப்படியே இருந்தது. இதனால் புறாக்களை மர்ம கும்பல் திருடிச் சென்றிருக்கலாம் என்று அவர் சந்தேகமடைந்தார்.
இதுகுறித்து லிசாடி கேட் பொலிஸ் நிலையத்தில் முகமது கியூம் புகார் அளித்தார். இதுகுறித்து பொலிஸார் கூறியிருப்பதாவது:-
அப்பகுதியை சுற்றியுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். திருடர்கள் ஏணி மூலம் மாடியில் ஏறி புறாக்களை திருடிச் சென்றுள்ளனர்.
அவர் வீட்டிலிருந்து வேறு எந்த பொருளும் திருடுபோக வில்லை. புறாக்களை மட்டும் குறிவைத்து திருடிச் சென்றுள்ளனர். திருடர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
முகமது கியூம் வளர்த்த புறாக்கள் அந்த பகுதியின் அடையாளமாகவே இருந்துள்ளது. அப்பகுதி மக்கள் தினமும் புறாக்களை வந்து பார்த்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். திருடர்கள் புறாக்களை மட்டும் குறிவைத்து திருடிச் சென்றுள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கி உள்ளது.