
சிறிய விபத்தால் நின்றுபோன அக்கா- தங்கை திருமணம்
உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கர்னாவால் கிராமத்தை சேர்ந்த அக்கா-தங்கை இருவருக்கு ஒரே நாளில் திருமணம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன்படி மணமகள்களின் வீட்டில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அங்கு விழா ஏற்பாடுகள் களைகட்டின. மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திருமண விழாவில் குவிந்தனர்.
இந்த நிலையில் மணமகள்கான அக்கா-தங்கை இருவரும் மணமகள் அலங்காரம் செய்து கொள்ள உறவினர்களுடன் காரில் அழகு நிலையம் சென்றனர். அவர்கள் அலங்காரத்தை முடித்துக்கொண்டு காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது கார் உரசியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 3 வாலிபர்களும் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் காரில் வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவர்கள் மணமகள்கள் இருவரையும் காரில் இருந்து வெளியே இழுத்து சரமாரியாக தாக்கினர்.
மேலும் அவர்களின் முகத்தில் சேற்றை வாரி இறைத்தனர். இதுப்பற்றி மணமகள்களின் குடும்பத்தினருக்கு தெரியவந்ததும் அவர்கள் பெரும் படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை நையப்புடைத்தனர்.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து திருமணம் நடைபெறும் இடத்துக்கு சென்று வன்முறையில் ஈடுபட்டனர்.
மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களை சரமாரியாக தாக்கியதுடன், அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி களேபரம் செய்தனர். இதில் மணமகள்களின் தந்தை உள்பட பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த வன்முறை காரணமாக மணமகன்கள் இருவரும் திருமணத்தை நிறுத்தினர். பொலிஸார் வந்து சமரசம் செய்தபோதும் மணமகன்கள் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டனர்.
ஒரே நாளில் நடக்க இருந்த அக்கா-தங்கையின் திருமணம் ஒரு சிறிய விபத்தால் நின்றுபோனது, அந்த கிராமத்தினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.