
ஆப்கானிஸ்தானில் தடை செய்யப்பட்ட பெண்கள் வானொலிக்கு மீண்டும் அனுமதி
ஆப்கனிஸ்தானில் ‘ரேடியோ பேகம்’ என்ற பெண்கள் வானொலி கடந்த மார்ச் 2021 இல் சர்வதேச மகளிர் தினத்தன்று தொடங்கப்பட்டது.
இது முழுக்க முழுக்க ஆப்கானிய பெண்களால் இயங்கும் ஒரு வானொலி ஆகும். இதன்மூலம் ஏழாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான ஆப்கானிய பாடசாலை பாடத்திட்டத்தை உள்ளடக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் இதன் இணை சேவையாக பேகம் டிவி என்ற சாட்டிலைட் தொலைக்காட்சியும் இயங்கி வந்தது.
ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கனிஸ்தானில் இருந்து வெளியேறியது. இதைத்தொடர்ந்து அங்கு தாலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
மத அடிப்படைவாதத்துடன் செயல்படும் தாலிபான்கள் பெண்களுக்கான பல்வேறு உரிமைகளை முடக்கினர். நாட்டில் பெண்கள் குழந்தைகள் ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தாலிபான்கள் தடை விதித்தனர்.
‘ரேடியோ பேகம்’ தடை செய்யப்பட்டது. இந்த தடையை நீக்கும்படி பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் ரேடியோ பேகம் மீதான தடையை தாலிபான் அரசு நீக்கியுள்ளது.
தாலிபானின் தகவல் மற்றும் கலாச்சார அமைச்சகம் நேற்று முன்தினம் (22) இரவு வெளியிட்ட அறிக்கையில், ‘ரேடியோ பேகம்’ செயல்பாடுகளை மீண்டும் தொடங்க அனுமதி கோரி பல முறை கோரிக்கைகள் வந்தன.
பத்திரிகை கொள்கைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் விதிகளின்படி ஒளிபரப்பப்படும் என்றும், எதிர்காலத்தில் எந்த மீறல்களையும் செய்யாது என்றும் அந்த நிலையம் உறுதி அளித்துள்ளதை அடுத்து தடை தளர்த்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கைகள் மற்றும் விதிகள் என்ன என்பது குறித்து அமைச்சகம் தெளிவுபடுத்தவில்லை. இது தொடர்பாக ரேடியோ பேகம் நிலையமும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.