
பித்தப்பை பிரச்சனைகளை காட்டும் அறிகுறிகள்
நமது உடலின் முக்கியமான உள்ளுறுப்புகளில் ஒன்று, பித்தப்பை. இது, கல்லீரலுக்கு கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை ஆகும். இந்த பை, கல்லீரல் வெளியிடும் பித்தநீரைச் சேமித்து வைக்கிறது.
உணவுகளை செரிப்பதற்கு பித்தநீர் உதவுகிறது. இந்த பித்தநீரில் இருக்கும் கொழுப்புகள் மற்றும் பிற பொருட்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்போது, அது ஒரு கட்டத்தில் பித்தக்கற்களை உருவாக்குகிறது. இந்த பித்தக்கற்கள் பித்தப்பையில் அடைப்பை ஏற்படுத்தும்போது பித்தப்பை தாக்குதல் ஏற்படுகிறது. பித்தப்பை தாக்குதல், பிலியரி கோலிக் தாக்குதல் எனப்படுகிறது. இது ஒரு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனையாகும்.
பித்தப்பையில் உள்ள நீர் சரியாக பாயாமல் இருந்தால், அதன் விளைவாக வீக்கமும், கடுமையான வலியும் ஏற்படும்.
பித்தப்பை தாக்குதல்களால் சந்திக்கும் அசவுகரியம், சில நிமிடங்கள் முதல் பல மணிநேரம் வரை நீடித்திருக்கலாம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
சரி, பித்தப்பையில் பிரச்சனை இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் வெளிப்படும் என பார்க்கலாம்…
மேல் வயிற்றுவலி
பித்தப்பையில் பிரச்சனை இருந்தால் வெளிப்படும் முதல் அறிகுறி, வயிற்றுவலிதான். அதுவும் இந்த வலியானது வயிற்றின் மேல்பகுதியில், விலா எலும்புகளுக்கு கீழே ஏற்படும். குறிப்பாக இந்த வலி லேசாக இல்லாமல், கூர்மையானதாக, தாங்க முடியாத அளவில் இருக்கும்.
வலது தோள்பட்டை, முதுகு வலி
பித்தப்பையில் பிரச்சனை இருந் தால், வயிற்றுப்பகுதியில் வலி தொடங்கி, அந்த வலி அப்படியே மேல்முதுகு மற்றும் வலது தோள் பட்டை வரை பரவும். இந்த வலி மிகவும் கடுமையானதாக இருக்கும்.
குமட்டல், வாந்தி
ஒருவரின் பித்தப்பையில் கற்கள் உருவாகி அதனால் பிரச்சனை ஏற்பட்டிருந்தால், அவருக்கு குமட்டல், வாந்தி, காய்ச்சல், குளிர் போன்றவை ஏற்படும். எனவே வயிற்றுவலியுடன் குமட்டல், வாந்தியையும் சந்தித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
அஜீரணக் கோளாறு, வயிறு வீக்கம்
அஜீரணக் கோளாறானது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். அதில் ஒன்றுதான் பித்தப்பை பிரச்சனை. ஒருவரது பித்தப்பை சரியாக செயல்படாவிட்டால், அது பல இரைப்பை பிரச்சனைகளை உண்டாக்கும், வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும்.
மஞ்சள் நிறத்தில் தோல், கண்கள்
பித்தப்பையில் இருந்து செல்லும் பித்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டால், ரத்த ஓட்டத்தில் பித்தம் படிந்து, அது சருமம் மற்றும் கண்களை மஞ்சள் நிறத்தில் மாற்றும். இப்படியான நிலை, பித்தப்பையில் ஏற்பட்டுள்ள கடுமையான பிரச்சனையின் அறிகுறியாகும். இப்படிப்பட்ட அறிகுறி ஏற்பட்டால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
சாம்பல், வெளிர் நிறத்தில் மலம்
பித்தப்பையில் அடைப்பு ஏற்பட்டு, பித்தநீர் ஓட்டத்தில் தடை ஏற்படும்போது, அதன் விளைவாக சாம்பல் அல்லது வெளிர் நிறத்தில் மலம் வெளியேறும்.
அடர்நிற சிறுநீர்
பித்தப்பையில் பிரச்சனை இருந்தால், ரத்த ஓட்டத்தில் பிலிரூபின் அதிகரித்து, அதன் விளைவாக அடர்நிறத்தில் சிறுநீர் வெளியேறும். அடர்நிற சிறுநீருக்கு பல காரணங்கள் இருந்தாலும், பித்தப்பை தாக்குதல் ஒரு முக்கியமான காரணமாகும்.
இந்த அறிகுறிகளை ஒருவர் சந்தித்தால், அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.