பறவைக் காய்ச்சலால் 4 வயது குழந்தை பாதிப்பு
இந்தியா – மேற்கு வங்காளத்தில் ஏவியன் இன்புளுவென்சா ஏ (H9N2) என்ற வைரஸினால் ஏற்படக்கூடிய அரிய வகை பறவைக் காய்ச்சலால் 4 வயது ஆண் குழந்தையொன்று பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அரிதாகக் காணப்படும் இந்த வகை வைரஸ் இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 2ஆவது பாதிப்பு பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தை கடந்த பெப்ரவரி மாதம் மூச்சுத்திணறல் மற்றும் கடுமையான காய்ச்சலால் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது.
பரிசோதனையில் H9N2 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைகளின் பின்னர் குழந்தையின் உடல்நிலை தேறியதையடுத்து குறித்த குழந்தை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டது.
இந் நிலையில் குறித்த வைரஸ் குழந்தையின் வீட்டிற்கு அருகில் உள்ள கோழிப் பண்ணையில் இருந்து தாக்கியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.