தங்கச்சங்கிலி போடாததால் திருமணம் நிறுத்தம்

தங்கச்சங்கிலி போடாததால் திருமணம் நிறுத்தம்

வேலூர் மாவட்டத்தை  சேர்ந்த 24 வயது இளம்பெண் நேற்று (13) ஒரு புகார் மனு அளித்தார். அதில், “’எனக்கு கடந்த மாதம் 3-ந் திகதி ராணிப்பேட்டையை சேர்ந்த வாலிபருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. அப்போது ஜூன் 10-ந் திகதி திருமணமும், 9-ந் திகதி மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்துவதாக முடிவானது.

அதையடுத்து கடந்த மாதம் 26-ந் திகதி திருமணத்துக்கு பட்டுப்புடவை எடுப்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் என்னை காஞ்சீபுரம் அழைத்து சென்றனர். அப்போது மாப்பிள்ளையின் சகோதரி திடீரென திருமணத்தின் போது 15 பவுன் நகை போட வேண்டும். அப்போது தான் திருமணம் நடைபெறும் என்று என்னிடம் தகராறு செய்தார்.

அந்த சம்பவத்தால் திருமணத்தை நிறுத்திவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் மாப்பிள்ளை எனது பெற்றோரிடம் திருமணத்துக்கு தங்க நகை வேண்டாம். பெண் கொடுத்தால் மட்டும் போதும் என்று கூறி சமாதானம் செய்தார். அதனால் நான் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டேன்.

இதற்கிடையே கடந்த 9-ந் திகதி மாலை திருத்தணி கோவில் சத்திரத்தில் திருமண வரவேற்பும், மறுநாள் காலை கோவிலில் திருமணமும் நடைபெறுவதாக இருந்தது. திருமண வரவேற்பையொட்டி நடந்த மணமகள் அழைப்பின்போது மாப்பிள்ளையின் தந்தை மற்றும் உறவினர்கள் எனது பெற்றோரிடம் மாப்பிள்ளைக்கு இப்போதே தங்கச்சங்கிலி உள்ளிட்ட நகைகள் போட வேண்டும். மேலும் வரதட்சணையாக பணமும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் மணமகளை கோவில் சத்திரம் அழைத்து செல்வோம் என்று கூறினர். அதற்கு எனது பெற்றோர், திருமண முகூர்த்தத்தின் போது தான் மாப்பிள்ளைக்கு நகை போடுவது எங்களின் வழக்கம் என்றனர்.

அதனை மாப்பிள்ளை வீட்டார் ஏற்றுக்கொள்ளாமல் வாக்குவாதம், தகராறு செய்து திருமணத்தை நிறுத்தினர். அதனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அந்த சம்பவத்தால் நான் மற்றும் எனது குடும்பத்தினர் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே இதுதொடர்பாக மாப்பிள்ளை வீட்டார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்டபொலிஸார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )