ஈரான் ஆதரவு போராளிகள் பதிலடிக்கு தயாராகும்நிலையில் ஹனியே உடல் கட்டாரில் நல்லடக்கம் !

ஈரான் ஆதரவு போராளிகள் பதிலடிக்கு தயாராகும்நிலையில் ஹனியே உடல் கட்டாரில் நல்லடக்கம் !

ஈரானில் வைத்து இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக நம்பப்படும் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியேவின் உடல் நல்லடக்க செய்யப்பட்ட
நிலையில், இஸ்ரேலுக்கு எதிரான மோதல் ‘புதிய கட்டத்தை’ எட்டி இருப்பதாக ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்ல அறிவித்துள்ளார்.

காசாவில் போர் ஒன்பது மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் நிலையில் ஹனியேவின் படுகொலை பிராந்தியத்தில் போர் சூழலை அதிகரித்துள்ளது.

இதற்கு எதிராக பழிதீர்ப்பது குறித்து ஈரானும் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நேற்றும் முன்தினம் இறுதிக் கிரியை நடைபெற்ற நிலையில் அவரது உடல் அன்று மாலை அவர் வாழ்ந்த கட்டாருக்கு கொண்டுவரப்பட்டது.

கட்டார் தலைநகர் டோஹாவின் வடக்கே உள்ளலுஸைலாவில் இமாம் முஹமது பின்
அப்துல் வஹ்ஹாப் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜனாஸா தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்ததோடு,ஹமாஸின் போட்டி அமைப்பான பத்தாவின் பிரதித் தலைவர் மஹ்மூத் அல் அலுல் உட்பட உயர்மட்ட தூதுக் குழு ஒன்றும் இந்த இறுதிக் கிரியையில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காசா போர் ஏற்கனவே பிராந்தியத்தில் பதற்ற சூழலை ஏற்படுத்தி சிரியா,லெபனான், ஈராக் மற்றும் யெமனில் உள்ள ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்கள் இஸ்ரேலுடனான
மோதலில் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில் ஹனியேவின் படுகொலை இந்த நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.

ஹனியேவின் மரணத்திற்காக துருக்கி மற்றும் பாகிஸ்தானில் நேற்று துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டதோடு, ‘சீற்றத்திற்கான தினமாக’ ஹமாஸ் அறிவித்தது.

ஈரான் அதிகாரிகள் கடந்த புதன்கிழமை ஹிஸ்புல்லா, ஹமாஸ் உட்பட தமது கூட்டணி போராட்டக் குழுக்களின் பிரதிநிதிகளை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேசி இருப்பதாக லெபனானில் ஹிஸ்புல்ல அமைப்பின் நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

‘இரு வாய்ப்புகள் பற்றி இதன் போது பேசப்பட்டன: ஈரான் மற்றும் அதன் ஆதரவு போராட்டக் குழுக்கள் ஒருங்கிணைந்து தாக்குவது அல்லது தனித் தனியே தாக்குவது பற்றியே பேசப்பட்டது’ என்று பெயர் குறிப்பிடப்பட்டாத மேற்படி நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் முன்னணித் தளபதி புவாத் ஷுக்ர்ரின் இறுதிக் கிரியை லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகரில் இடம்பெற்றது.

இதில் கறுப்பு ஆடை அணிந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதன்போது கூடியிருந்தவர்கள் முன் தொலைக்காட்சியில் உரையாற்றிய ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா,

இஸ்ரேலுக்கு எதிரான மோதல் புதிய கட்டத்தை எட்டி இருப்பதாகவும், எதிரி சிவப்புக் கோட்டை தாண்டி இருப்பதால் அதற்கான பதிலுக்கு காத்திருக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேலின் லெபனான் எல்லையில் ஹஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையே கிட்டத்தட்ட தினசரி பரஸ்பரம் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

அண்மைய சம்பவங்கள் இந்தப் பதற்றம் முழு அளவில் போர் ஒன்றாக வெடிக்கும் அச்சுறுத்தலை அதிகரிக்கச் செய்துள்ளது.

ஹனியே படுகொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னரே பெய்ரூட்டில் வைத்து சுக்ர் கொல்லப்பட்டார்.

ஏற்கனவே இந்த ஆண்டு ஆரம்பத்தில் பெய்ரூட்டில் ஹமாஸ் பிரதித் தலைவர் சலேஹ் அல் அரூரி கொல்லப்பட்டார்.

அதனை இஸ்ரேல் செய்ததாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

காசாவில் கடந்த ஜுலையில் நடத்திய தாக்குதல் ஒன்றில் ஹமாஸ் ஆயுதப் பிரிவு தலைவர் முஹமது தெயிப் கொல்லப்பட்டது உறுதியாகி இருப்பதாக இஸ்ரேல் கடந்த வியாழக்கிழமை குறிப்பிட்டது.

எனினும் இது குறித்து ஹமாஸ் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஹனியே தங்கியிருந்த டெஹ்ரானில் உள்ள விருந்தினர் விடுதியில் பல வாரங்களுக்கு முன்னரே பொருத்திய வெடிபொருள் வெடித்தே அவர் கொல்லப்பட்டிருப்பதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை, மத்திய கிழக்கு அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இது பற்றி இஸ்ரேல் இராணுவப்பேச்சாளர் டானி ஹகரியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘லெபனானில் சுக்ர் கொல்லப்பட்ட இரவில் அதனை தவிர மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேலின் எந்த ஒரு வான் தாக்குதலும் இடம்பெறவில்லை’ என்றார்.

எவ்வாறாயினும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் நீடிக்கும் நிலையில் கடந்த வியாழக்கிழமை காசா நகரின் ஷுஜைய்யாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டு மேலும் 29 பேர் காயமடைந்
திருப்பதாக பலஸ்தீன அவசர சேவைபிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம் தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் குடியிருப்பு கட்டடம் ஒன்றின் மீது நேற்றுக் காலை இடம்பெற்ற வான் தாக்குதலில் நான்குபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

மத்திய காசாவின் மகாசி அகதி முகாமில் நேற்று இடம்பெற்ற மற்றொரு வான் தாக்குதலில் மேலும் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

பத்து மாதங்களை நெருங்கும் காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,500ஐ தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்து வந்த ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவரின் படுகொலை போர் நிறுத்த ஏதிர்பார்ப்பையும் சிதைத்துள்ளது.

ஹனியோவின் படுகொலை காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை அடைவதற்கு உதவாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )