செயற்கை கால் மற்றும் கைகளை தயாரிக்கும் திட்டம் ஆரம்பம்
இந்தியாவின் உதவியுடன் செயற்கை கால் மற்றும் கைகளைத் தயாரிக்கும் திட்டம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவமும் இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இணைந்து இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளன.
இது தொடர்பான செயலமர்வு அண்மையில் ராகமையிலுள்ள இராணுவ புனர்வாழ்வு நிலையத்தில் ஆரம்பமானது. இந்த செயலமர்வு இம்மாதம் 23ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
இதற்காக செயற்கை உடல், உறுப்புகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற 8 இந்தியர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
குறித்த செயலமர்வில் விசேட தேவையுடைய 375 இராணுவ சிப்பாய்கள், 75 விமானப்படையினர், கடற்படையினர் மற்றும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு செயற்கை கை மற்றும் கால்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
அத்துடன், விசேட தேவையுடைய 200 பொதுமக்களுக்கும் செயற்கை கை மற்றும் கால்களை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.