புதிய அரசியல் கூட்டணி செப்டெம்பர் 5 ஆம் திகதி உதயம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய அரசியல் கூட்டமைப்பு, செப்டெம்பர் 05 இல், அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.
ஜன ஜய பெரமுன என்றபெயரில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இப்புதிய கூட்டணி உதயமாகும். இப்புதிய அரசியல் கூட்டமைப்பு இனி வரும் சகல தேர்தல்களிலும் வேட்பாளர்களை நிறுத்த உத்தேசித்துள்ளது.
முதற்கட்டமாக எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் செப்டெம்பர் 12 க்கு முன்னர், சமர்ப்பிக்க ஜனஜய பெரமுன தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளக்கூடிய பரந்த கூட்டணியே இந்த புதிய கூட்டணியென இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், 2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் படி, வாக்களிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தால், புதிதாக ஒரு இலட்சம் இளைஞர் சமூகம் வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைக்குமென்றும் தெரிவித்துள்ளார்.