இஸ்ரேலுக்கு சில ஆயுதங்களின் ஏற்றுமதியை நிறுத்தியது பிரிட்டன்
சர்வதேச சட்டங்களை மீறுவதற்கு பயன்படுத்தும் ஆபத்து இருப்பதாகக் கூறி இஸ்ரேலுக்கான சில ஆயுத விற்பனைகளை பிரிட்டன் இடைநிறுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கான 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30 ஐ இடைநிறுத்துவதாக பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் டேவிட் லம்மிஅறிவித்துள்ளார்.
இதில் போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்களும் அடங்கும். எனினும் இந்த முடிவு ஆயுதத் தடை ஒன்றாக இருக்காது என்றும் சர்வதேச சட்டத்திற்கு அமைய இஸ்ரேலின் தற்பாதுகாப்பு உரிமைக்கு பிரிட்டன் ஆதரவு அளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த முடிவு ஏமாற்றம் தருவதாகவும் தவறான செய்தியை வழங்குவதாகவும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா போன்று பிரிட்டன் இஸ்ரேலுக்கு நேரடியாக ஆயுதங்கள் வழங்குவதில்லை என்பதோடு ஆயுதங்கள் விற்கும் நிறுவனங்களுக்கு உரிமத்தை வழங்கிவருகிறது. எவ்வாறாயினும் இஸ்ரேலுக்கு கிடைக்கும் ஆயுதங்களில் வெறும் ஒரு வீதத்துக்கும் குறைவான அளவையே பிரிட்டன்
வழங்குகிறது.