நாளை புதிய அரசியல் கூட்டணி  உதயம்

நாளை புதிய அரசியல் கூட்டணி உதயம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருந்தொகையான பிரதிநிதிகளின் பங்கேற்புடன், அரசியலில் புதிய திசையை நோக்கிய பரந்த புதிய அரசியல் கூட்டணியின் அறிமுகம் நாளை (05) இடம்பெறவுள்ளதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிக்கும் நோக்கில் இந்த கூட்டணி வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

பத்தரமுல்லையில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு கருத்து தெரிவித்த ரமேஷ் பத்திரன மேலும் கூறியதாவது,

“இலங்கையில் நடுநிலை அரசியல் சித்தாந்தங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளின் பங்கேற்பினால் உருவாக்கப்பட்ட பரந்த கூட்டமைப்பு நாளை (05) காலை 09:00 மணிக்கு வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த கூட்டணியை கட்டியெழுப்புகின்றனர். எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய அரசியல் கூட்டணியை தொடங்குவதே இலக்கு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் எதிர்காலத்தில் எடுக்கும் அரசியல் நிலைப்பாடு தொடர்பில் இந்நாட்டு மக்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட்டனர். அவர்கள் இடதுசாரி நடுநிலைவாதிகள்.

இவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் அதே நடுநிலையான அரசியல் கருத்தை முன்வைத்து இலங்கை மக்களுக்கு சேவையாற்ற பாடுபடுவார்கள். அதற்கு அரசியல் மேடை தேவைப்பட்டது. அந்த மேடையை உருவாக்கும் நோக்கில் இந்த பரந்த கூட்டணியை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. எதிர்வரும் தேர்தல்களில் ஒரே மாதிரியான யோசனைகள் மற்றும் கொள்கைகளுடன் குழுவாக இணைந்து செயற்படுவதே இதன் இலக்கு.

ஜனாதிபதித் தேர்தல் யுத்தம் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ள நிலையில், எங்களுக்கான நீண்ட கால நிலையான அரசியல் அடித்தளத்தை உருவாக்குவதே எமது அடுத்த இலக்காகும்.

சமமான எண்ணம் கொண்ட ஒரு குழு ஒன்று கூடுகிறது. எதிர்காலத்தில் ஐக்கிய முன்னணியில் ஆர்வமுள்ளவர்கள் எம்முடன் இணையலாம். இந்தக் கூட்டணியில் உள்ள அனைவரும் தற்போதைய ஜனாதிபதியின் வெற்றிக்காக உழைத்து வருகின்றனர்.

இது எதிர்காலவாதிகளின் குழு. எதிர்கால அரசியல் நடப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழு. சில அரசியல் கட்சிகளின் ஜனநாயகம் குழப்பமாகிவிட்டது. எனவே, நவீன ஜனரஞ்சகவாதிகளுடன் கூடிய ஜனநாயக அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதே எமது நம்பிக்கை.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பழைய வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தேர்தலுக்கு முந்தைய ஆண்டு வாக்காளர் பட்டியலின்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அந்த முடிவின் மையக்கரு. தற்போதைய சூழ்நிலையில், பழைய வேட்புமனுக்கள் மற்றும் பழைய வாக்குப் பட்டியலின் கீழ் வாக்குப்பதிவு நடத்தினால், கிட்டத்தட்ட ஒன்பது இலட்சம் பேர் வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும். வாக்களிக்கும் உரிமையைப் போலவே இளைஞர் சமூகமும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டும்.

இது மனித உரிமை மீறல், ஜனநாயக மீறல். இந்த விடயங்களை கருத்திற் கொண்டு, சட்ட திருத்தம் மற்றும் தேர்தல் வேட்புமனுக்களை ரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கு எந்த சட்டத் தடையும் இல்லை” என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )