டின்சின் த.வி அதிபரின் உயிருக்கு அச்சுறுத்தல்
பொகவந்தலாவை டின்சின் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பொன்.பிரபாகரனுக்கு பல தரப்பினராலும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள அவர், ஹட்டன் கோட்டக்கல்வி காரியாலயம், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளார்.
இதேவேளை. அதிபர் பிரபாகரன், மாணவிகளை கண்டிக்கும் போது கடுஞ்சொற்களை , வார்த்தைகளையும் பிரயோகித்துள்ளார் என்று குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இதனை மாணவிகள் சிலரும் அவர்களின் பெற்றோர்களும் ஹட்டன் கல்வி வலய பணிப்பாளரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
அதனையடுத்து பாடசாலைக்கு விஜயம் செய்த பணிப்பாளரிடம், இந்த அதிபர் தங்களுக்கு வேண்டாம் என்றும் கல்வி பயிலுவதற்கான சுமூகமான சூழலை ஏற்படுத்தி தருமாறும் கடிதங்களை மாணவிகள் சிலர் கையளித்தனர்.
அவற்றை வாங்கி படித்த பணிப்பாளர் இது தேர்தல் காலம் என்பதால், தேர்தல் முடிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்நிலையில் சமூக பேஸ்புக்கில் அதிபருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் குரல் பதிவுகள் பகிரப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் பாடசாலையை பொறுப்பேற்று கொண்டு , வேறு ஒரு பாடசாலையில் கையொப்பம் இடுவதற்கான சந்தர்ப்பத்தை தனக்கு ஏற்படுத்தி தருமாறு, கல்வி பணிப்பாளரிடம் அதிபர் ஏற்கெனவே கோரியுள்ளதாகவும் அறியமுடிகிறது.
பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்களைக்கொண்டு ஆராய்ச்சி மாநாட்டை, பாடசாலையில் கடந்தவாரம் இந்த அதிபர் நடத்தி இருந்தார். அதனை இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து வருகை தந்திருந்தவர்களும் பாராட்டி உள்ளனர்.
அந்த ஆராய்ச்சி மாநாட்டுக்கு கட்டுரைகளை சமர்ப்பிக்காத மாணவ,மாணவிகள் சிலரை திட்டி தீர்த்ததை அடுத்தே இவ்வாறான பதிவுகள் இடப்பட்டு அதிபருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்றைய தினம் (15) பிற்பகல் 3 மணிக்கு பாடசாலை நிர்வாகத்திற்கு எதிரான கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம், சுமார் 10 வருடங்களுக்கு மேலாக செயற்படாமல் இருக்கும் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.