இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு !
இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்ரசிறி தலைமையிலான நிபுணத்துவக் குழுவினர் இந்த சட்ட மூலத்தைத் தயாரித்து, ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
இலங்கை கிரிக்கெட் சபை எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து தேடியறிந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக அமைச்சரவையினால் 06.11.2023 திகதியன்று அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த அமைச்சரவை உப குழுவில், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையில், மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தொழில், வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் அங்கம் வகித்தனர்.
அந்த குழு கிரிக்கட் துறையுடன் தொடர்புபட்ட சகல தரப்பினருடனும் ஆலோசித்து 08.01.2024 திகதி அறிக்கையொன்றை சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில் இலங்கை கிரிக்கட் கட்டமைப்பை முழுமையாக மறுசீரமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டது. இதற்கமைய தேசிய ஆண்கள், பெண்கள் அணிகள், 19 ,17 வயதுகுட்பட்ட பிரிவு அணிகள் உட்பட பல்வேறு மட்டத்திலான கிரிக்கெட் நிர்வாகம், பயிற்சி மற்றும் இருப்பு, வௌிப்படைத் தன்மை, தொழில் தன்மை மேம்பாடு, திறன், சமத்துவம், நியாயப்பாடு மற்றும் இலங்கை கிரிக்கட்டின் மூலதனமாக காணப்படும் பாடசாலை, மாவட்ட, மாகாண, கழக மட்டத்திலான மறுசீரமைப்புக்கான பரிந்துரைகள் உள்ளடங்கியுள்ளன.
அதன்படி அமைச்சரவை உப குழு அறிக்கையை மையப்படுத்தி, அமைச்சரவையினால் கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இலங்கை கிரிக்கட் சபைக்கு புதிய யாப்புக்கான சட்டமூலத்தை தயாரிக்க நிபுணத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்ரசிறியின் தலைமையில், சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர, கலாநிதி அரித்த விக்ரமநாயக்க, இலங்கை வணிகச் சபையின் தலைவர் துமிந்த உலங்கமுவ ஆகியோருடன், நீதி அமைச்சரின் பரிந்துரைக்கமைவாக சட்டமா அதிபர் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மனோஹர ஜயசிங்க மற்றும் சட்டமூல தயாரிப்பு திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி உதவி சட்டமூல தயாரிப்பாளர் சமிலா கிருஷாந்தி உள்ளிட்டவர்கள் இந்த நிபுணர் குழுவில் அங்கம் வகித்தனர்.
மேற்படி இந்தக் குழுவின் செயலாளர்/ இணைப்பாளராக ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் லோஷினி பீரிஸ் நியமிக்கப்பட்டார்.
நிபுணத்துவக் குழுவினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தைக் கையளிக்கும் நிகழ்வில், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் (அமைச்சரவை அலுவல்கள்) சமித் தலகிரியாவ உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு