ஈரானுக்கு பதிலடி தர எல்லாம் தயாராக உள்ளது
இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு ஒக்டோபர் 7-ந்திகதி இசை கச்சேரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க இளைஞர்கள், இளம்பெண்கள் என பலர் திரளாக வந்திருந்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென புகுந்த ஹமாஸ் அமைப்பு, ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தியது.
இதில், இஸ்ரேல் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பு, அவர்களில் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது.
எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த மோதல் நடந்து ஓராண்டாகிறது. இதில், 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர் என்று காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதேபோன்று, ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரானும் சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலின் 2 இராணுவ தளங்களை இலக்காக கொண்டும் ஈரான் தாக்குதல் நடத்தியது. நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் இராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
எனினும், அவற்றில் பல ஏவுகணைகளை வழியிலேயே தடுத்து, அழித்து விட்டோம் என இஸ்ரேல் கூறியது. ஆபரேசன் ட்ரூ பிராமிஸ் 2 என்ற பெயரில் ஈரான் நடத்திய இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டார். ஈரான் பெரும் தவறை செய்து விட்டது. அதற்கான விலையை அந்நாடு கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த சூழலில், இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவா கேலன்ட் சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது, “ஈரான் நாட்டுக்கு பதிலடி தருவதற்கான அனைத்து விசயங்களும் தயாராக உள்ளன. இந்த பதிலடிக்கு அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.