ரஷ்யாவுக்கு 12 ஆயிரம் இராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளது
தென்கொரியாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி கொரிய பிராந்தியத்தை பதற்றத்தில் வைத்துள்ளது.
தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதால் அமெரிக்காவுடன் மோதல் போக்குடன் வடகொரியா செயல்பட்டு வருகிறது.
இதனால், வடகொரியாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால், பொருளாதார பாதிப்பை சந்தித்து இருக்கும் வடகொரியாவுக்கு ரஷியா , சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளிக்கின்றன.
இதற்கு கைமாறாக ரஷ்யாவுடன் மிகவும் இணக்கமாக வடகொரியா செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு உதவும் விதமாக தங்கள் நாட்டு இராணுவ வீரர்கள் 12 ஆயிரம் பேரை வடகொரியா அனுப்பியிருப்பதை தென்கொரிய உளவு அமைப்பு கண்டறிந்துள்ளது.
உக்ரேன் -ரஷ்யா இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.