வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சஹாரா பாலைவனம்
ஆப்பிரிக்காவின் வடபகுதியில் 90 லட்சம் சதுர கி.மீ. பரந்து விரிந்திருக்கும் சஹாரா பாலைவனம், உலகின் மிகப்பெரிய வெப்ப பாலைவனமாகும். இந்த பாலைவனம் சுமார் 25 லட்சம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது எனவும், அதற்கு முந்தை காலகட்டத்தில் அந்த நிலப்பரப்பில் ஏரிகளும், ஆறுகளும் இருந்துள்ளது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வடக்கு, மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா வரை சஹாரா பாலைவனம் நீண்டு விரிந்து இருக்கிறது.
இந் நிலையில், ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் உள்ள சஹாரா பாலைவனப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் சஹாரா பாலைவனத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த அரிதான நிகழ்வு புவியியல் ஆய்வாளர்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதிகரித்து வரும் புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பாலைவனப் பிரதேசத்தில் இத்தகைய மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மொராக்கோவில் 24 மணி நேரத்தில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவானதாக மொராக்கோ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வரண்டு போயிருந்த இரிக்கி என்ற ஏரியில் மீண்டும் தண்ணீர் நிரம்பியது.
இந்த நிலையில், மொராக்கோவில் தற்போது பெய்து வரும் கனமழையால் மீண்டும் சஹாரா பாலைவனம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
உலகின் மிகவும் வரண்ட நிலப்பரப்பாக கருதப்படும் சஹாராவில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படுவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.