சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு !

சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு !

சுகாதாரத் துறையில் நிலவிய பெரும்பாலான சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தேவையான அனைத்து மருந்துகளும் தற்போது கைவசம் உள்ளதாகவும் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

உயிர் பாதுகாப்பு மருந்துகள் அனைத்தும் சுகாதாரத் துறையில் உள்ள நிலையில் 52 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்டாலும், அதற்குப் பதிலாக உபயோகிக்கக்கூடிய மருந்துகள் நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று மருத்துவ திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“வெளிநாடுகளில் மருத்துவ பட்டப்படிப்பை மேற்கொண்டு நாடு திரும்புவோருக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேவேளை நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்ற மருத்துவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு தீர்மானம் எடுத்துள்ளமையையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

சுகாதாரத் துறையில் விசேட மருத்துவர்களின் தட்டுப்பாடு காணப்படுகிறது. அந்த வகையில் வெளிநாடுகளில் மருத்துவ பட்டப்படிப்பை மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தரும் போது அதனை இங்கு ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவ்வாறானவர்கள் அசௌகரியங்களுக்கு உட்படுகின்றனர். அந்த வகையில் உலகில் முன்னணியிலுள்ள ஆயிரம் மருத்துவ பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றவர்கள் நாட்டிற்கு வந்து சேவை செய்ய முடியும்.

நாட்டில் சிறந்த சுகாதாரத் துறையை கொண்ட நாடுகள் ஆசியாவில் உள்ளன. அதில் எமது நாடு 47ஆவது இடத்தில் காணப்படுகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

1948ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் எத்தகைய பிரச்சினைகள் இருந்த போதும், சுகாதார சேவையின் அபிவிருத்திக்கு அனைத்து அரசாங்கங்களும் நடவடிக்கை எடுத்துள்ளன. அந்த வகையில் சுகாதாரத் துறைக்காக ஒதுக்கப்படும் நிதியும் அதிகரித்து வருகின்றது. எமது நாட்டில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுகாதாரத் துறையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். தற்போது நாட்டில் 52 மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவினாலும் அதற்குப் பதிலாக உபயோகிக்கக்கூடிய மருந்துகள் அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ளன. கடந்த காலங்களில் சுகாதாரத் துறையில் நிலவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் டெங்கு மரணங்கள் வெகுவாக குறைந்துள்ளன.டெங்கு நோய் தாக்கமும் வெகுவாக குறைந்துள்ளது.

அந்த வகையில் நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக கடந்த வாரம் 9 சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

தாய், சேய் மரணம் தொடர்பான தேசிய அலுவலகம் ஒன்றை நாட்டில் ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோயாளர்களின் பாதுகாப்புக்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம். நோய் கட்டுப்பாட்டு மத்திய நிலையமும் உருவாக்கப்படவுள்ளது” என்று தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )