1 பில்லியன் ரூபாய் இழப்பீடு கோருகிறார் மனுஷ நாணயக்கார
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோசல விக்ரமசிங்கவிற்கு கொரிய E8 வீசா முறைமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரிக்கை கடிதம் ஒன்றை (LOD) அனுப்பியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது, கோசல விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சருக்குத் தொடர்புடைய நிதி மோசடி குறித்து சூசகமாக தெரிவித்ததாக, முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
SLBFE தலைவர் தனது நற்பெயருக்கு சேதத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டி, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ரூ. 01 பில்லியன் இழப்பீடு கோரியுள்ளார்.
மேலும், கொரிய E8 வீசா முறை தொடர்பில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் முன்னாள் அமைச்சர் நாணயக்கார அழைப்பு விடுத்துள்ளார்.
விசா முறையின் கீழ் தாம் நிதி ரீதியான நன்மைகளை பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், தனது அரசியல் மற்றும் தனிப்பட்ட நற்பெயருக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொரிய E8 வீசா பிரிவின் கீழ் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து பணத்தை மோசடி செய்த நபர்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக SLBFE வெளிப்படுத்தியதை அடுத்து மனுஷ நாணயக்கார இந் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.