பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வு  ; ஐந்து பேரிடம் விசாரணை

பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வு ; ஐந்து பேரிடம் விசாரணை

யாழ். வல்வெட்டித்துறையில் அண்மையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பிறந்த தின நிகழ்வில் பங்கேற்ற ஐந்து பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வல்வெட்டித்துறையில் விடுதலைப்புலிகளின் தலைவரது குடும்பத்தின் பூர்வீக இல்லத்தில் பிறந்த தினக் கொண்டாட்டத்துக்காகத் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படத்தைக் கொண்ட பதாகை ஒன்றும் அச்சிடப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போது அங்கு வந்திருந்த வல்வெட்டித்துறைப் பொலிஸார் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருடைய புகைப்படத்தைப் பயன்படுத்த முடியாது என்றும், அதற்குச் சட்டத்தில் இடமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த புகைப்படத்தை மறைத்துவிட்டு பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்பட்டது.

இதேவேளை, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற பிரபாகரனின் பிறந்த தினக் கொண்டாட்டம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )