துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகிய டுமினி
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வெள்ளைபந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரான ஜே.பி. டுமினி குறித்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
இந்நிலையில், தென்னாபிரிக்காவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அந்த அணியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் (ஒருநாள், டி20) துடுப்பாட்ட பயிற்சியாளராக செயற்பட்டு வந்த முன்னாள் வீரர் ஜே.பி. டுமினி அந்தப்பதவியில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை உடனான பரஸ்பர ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஜே.பி. டுமினி வெள்ளைப் பந்து துடுப்பாட்ட பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து உடனடியாக விலகியுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.