சபாநாயகர் இராஜினாமா : எதிர்வரும் 17ஆம் திகதி புதிய சபாநாயகர் தெரிவு!
அசோக ரங்வலவின் இராஜினாமாவால் வெற்றிடமாகியுள்ள சபாநாயகர் பதவிக்கான புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், அன்றைய தினம் புதிய சபாநாயகர் நியமனம் தொடர்பான வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பாராளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் ஒருவர் பதவி விலகுவது இதுவே முதல் தடவை என பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை சபாநாயகரால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடமோ அல்லது ஜனாதிபதியிடமோ வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு கிடைத்த பின்னர் சபாநாயகரின் இராஜினாமா கடிதம் தொடர்பில் ஜனாதிபதி தீர்மானம் எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டால், புதிய சபாநாயகரை மீண்டும் பாராளுமன்றம் தெரிவு செய்ய வேண்டும் எனவும், பொதுச் சட்டத்தின் கீழ் வாக்களித்து அல்லது நியமனம் மூலம் புதிய சபாநாயகரை தெரிவு செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் (13) சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அசோக ரங்வல விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்திருந்தார்
குறித்த அறிக்கை,
கடந்த சில நாட்களாக எனது கல்வித் தகுதி குறித்த பிரச்சனை சமூகத்தில் எழுந்துள்ளது.
எனது கல்வித் தகுதி குறித்து தான் இதுவரை எவ்வித பொய்யான அறிவிப்புக்களையும் விடுக்கவில்லை.
ஆனால், கல்வித் தகுதியை உறுதிப்படுத்த தேவையான சில ஆவணங்கள் என்னிடம் இல்லாததாலும், அவற்றை உரிய நிறுவனங்களிடம் பெற வேண்டியதாலும், தற்போது அந்த ஆவணங்களை விரைவாகச் சமர்ப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனக்கு முனைவர் பட்டம் வழங்கிய ஜப்பானில் உள்ள வஷிதா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனத்தினால் குறித்த கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும், விரைவில் அவற்றை சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளேன்.
எவ்வாறாயினும், ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் மற்றும் எம்மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக நான் தற்போதைய சபாநாயகர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என குறிப்பிட்டிருந்தார்