கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்

கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்

நத்தார், கிறிஸ்து பிறப்புப் பெருவிழா அல்லது கிறிஸ்துமஸ் (Christmas) என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும்.

இவ்விழா கிறிஸ்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும்.

இவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும்.

கிறிஸ்தவக் கருத்துகளோடு, கிறிஸ்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்காலக் கொண்டாட்டங்களின் சில பகுதிகளையும் கிறிஸ்துமஸ் தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கொண்டாட்டத்தின் மதம் சாராப் பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா கிறிஸ்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும்.

இது பெரும்பாலான கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்படுகிறது எனினும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியின் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐக் குறிக்கும் நாளான ஜனவரி 7ஆம் நாள் கொண்டாடுகின்றன.

கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நாளானது மரபு வழியாக வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று.

கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, இயேசுவின் சரியான பிறந்த திகதியை அறிந்து கொள்வதை விட, மனிதகுலத்தின் பாவங்களுக்குக் கழுவாயாகக் கடவுள் மனித வடிவில் உலகில் வந்தார் என்று நம்புவதே கிறிஸ்துமஸ் கொண்டாடுவதன் முதன்மை நோக்கமாகக் கருதப்படுகிறது.

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்தவத்தின் பரவல் காரணமாகவும் அக்கொண்டாட்டங்களில் காணப்படும் மேற்குலக நாகரிகங்களின் கவர்ச்சி காரணமாகவும் கொண்டாடப்படுகிறது.

இயேசுவின் பிறப்பு பற்றி கிறித்தவ மறைநூலாகிய விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாடு தகவல் தருகிறது.

குறிப்பாக, மத்தேயு, லூக்கா என்னும் நற்செய்திகள் தருகின்ற தகவற்படி, கபிரியேல் என்ற இறைத்தூதர், கன்னி மரியாளிடம் பரிசுத்த ஆவிமூலமாக இயேசு பிறக்கப்போவதை முன்னறிவித்தார்.

அச்சமயம் மரியாள் யோசேப்பு என்பவருக்கு மணமுடிக்க நிச்சயிக்கப் பட்டிருந்தார். மரியாள் கற்பமாயிருப்பதை தெரிந்து கொண்ட யோசேப்பு மரியாளை இரகசியமாக விலக்கிவிட நினைத்தார்.

இறைத்தூதர் யோசேப்புக்கு தோன்றி மரியாள் கருத்தரித்திருப்பது பரிசுத்த ஆவியினால் என்பதை தெரிவிக்கவே யோசேப்பு மரியாளை மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

மரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது பாலஸ்தீனத்தை ஆட்சி செய்த உரோமைப் பேரரசன் அகுஸ்துஸ் மக்கள் தொகை கணிப்பீடு ஒன்றை கட்டளையிட்டார்.

அவர் கட்டளைப்படி யோசேப்பும் மரியாளும் தங்களை பதிவு செய்ய யோசேப்பின் முன்னோரான தாவீதின் நகரமான பெத்லகேமுக்குச் சென்றனர். தங்குவதற்கு அறைகள் கிடைக்காத நிலையில் மாட்டுத் தொழுவமொன்றில் தங்கினார்கள்.

அம் மாட்டுத் தொழுவத்தில் மரியாள் இயேசுவை பெற்றார்.இயேசு பிறந்ததற்கு அடையாளமாக விண்மீன் ஒன்று வானில் தோன்றியது.

இயேசு பிறந்த நேரம், அருகிலுள்ள புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இடையருக்கு இறைத்தூதர் தோன்றி பெத்லகேமில் மீட்பர் பிறந்திருக்கிறார் என்ற நற்செய்தியை அறிவிக்கிறார்.

மேலும் பரலோக இறைத்தூதரனைவரும் “உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக, இப் பூமியில் நன்மனதோருக்கு அமைதியுமாகுக” என பாடினர். இடையர் எழுந்து நகருகுள் சென்று குழந்தை இயேசுவை கண்டு வணங்கினார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )